மேலும்

மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுகிறார் சம்பந்தன் – விக்னேஸ்வரன்

CM-NPCதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுவதாக, அவருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் மூலம் தெரியவந்திருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்திய மூன்று மணிநேரப் பேச்சுக்களின் பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர், கருத்து வெளியிடுகையில், “எனக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றை கனகஈஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.  இந்தப் பேச்சுக்கள் சுமுகமான முறையில் இடம்பெற்றிருந்தன.

எம்மிடையே நீண்ட தொடர்பாடல் இடைவெளியொன்று ஏற்பட்டிருந்தது. இதனால் என்ன நடைபெறுகின்றதென்பதே தெரியாதிருந்தது.

அவ்வாறான நிலையில் எமக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தொடர்பாக  நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி முடிவுக்கு வந்துள்ளோம்.

இந்தப் பேச்சுக்களில் எமக்கிடையில் ஒரு ஒற்றுமையை கண்டுள்ளோம். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுவதும் மற்றும், மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் செயற்படுவது எம் இருவரும் இடையில் ஒரேவிதமான கருத்தே உள்ளது.

இதனால், மக்களின் நலன் மற்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கேற்றவாறு எமது கடமைகளை புரிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் நான் நடுநிலை வகித்தமை தொடர்பாக இரா.சம்பந்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதேவேளை அந்த முடிவை எடுத்தமைக்கான காரணம் மற்றும் எனது செயற்பாடுகள் குறித்த எனது கருத்துக்களை நான் வெளியிட்டிருந்தேன்.

இது ஓரிரு நாட்களுக்குள் பேசித் தீர்க்கின்ற விடயமல்ல. இன்னும் பேசிக் கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. எனவே தொடர்ந்து பேச இணங்கியிருக்கிறோம்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படுவது பற்றி இரா.சம்பந்தன் எடுத்துக் கூறினார். எனினும், இதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாதுள்ள நிலையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எந்தக் கருத்தை வெளியிட்டாலும், அதனை சிங்கள மக்களிடம் எதிர்மறையாக எடுத்துச் சென்று பரப்புரை செய்யப்படும் சூழல் ஒன்று உள்ளதால், இதுபற்றிய அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், இந்தப் பேச்சுக்களில் எத்தகைய முடிவு எடுக்கப்பட்டாலும், அது பற்றி எமக்குத் தெரியப்படுத்தப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டே, நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் கருத்துக்களில் இருந்து மக்களின் நலனையே அவர் முதன்மைப்படுத்தவதாக தெரிகிறது. இதனைத் தான் நாமும் வலியுறுத்தி வருகிறோம்.

எங்களுடைய கருத்தில் நோக்கில், ஒருமைப்பாடு இருப்பதை நான் காண்கிறேன். பாதைகள் வேறுபட்டதாக இருந்தாலும், எடுத்திருக்கும் முடிவுகள் ஒரே நோக்கை கொண்டிருப்பதாக இருப்பதால், எம்மால் சேர்ந்து இணைந்து முன்னேற முடியும் என்று கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *