மேலும்

2015 சிறிலங்காவின் வரலாற்றுத் திருப்பம்மிக்க ஆண்டு – அனைத்துலக ஊடகம்

maithri-final-campain (1)அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு east asia forum ஊடகத்தில், David Brewster* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மாற்றங்களை நோக்கும் போது , 2015ஆம் ஆண்டானது  ஒரு வரலாற்று திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

சிறிலங்கா வாழ் மக்கள் தமது நாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்புவதில் ஒரு தீர்க்கமான தெரிவை எடுத்துள்ளனர். இவை மட்டுமல்லாது, சிறிலங்கா தனது பாரம்பரிய வெளியுறவுக் கோட்பாட்டு வட்டத்தை நோக்கி மீண்டும் நகர்வதற்கும் இந்த ஆண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் துணைபுரிந்துள்ளன.

இது தென்னாசியாவின் வெற்றிச் சரித்திரத்தில் சிறிலங்கா இடம்பிடிப்பதற்கான விழுமியங்களின் மீள்பிரகடனமாக அமைந்துள்ளது.

சிறிலங்கா 2015ஐ ஊழல் மற்றும் அதிகாரத்துவ ஆட்சியுடன் ஆரம்பித்தது. அதாவது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் மேலும் ஒரு பத்தாண்டு நீடிக்கலாம் என்கின்ற நிலை 2015ன் ஆரம்பத்தில் காணப்பட்டது.

2009ல், பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ராஜபக்சவின் இந்தப் போர் வெற்றியானது அவர் தொடர்ந்தும் சிறிலங்காவின் அரசியலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான தருணத்தைத் தோற்றுவித்தது.

2009இலிருந்து, ராஜபக்ச குடும்பம் தனது செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் நாட்டின் முக்கிய அரசியல், சிவில் நிறுவகங்களில் பிரயோகித்தது. இதனால் சிறிலங்காவின் நல்லாட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் மேலும் மேலும் ஊழல்கள்  ஏற்பட்டன.

சிறிலங்காவை அதன் பாரம்பரிய வெளியுறவு வட்டத்திலிருந்து இழுத்தெடுத்து வேறுதிசைக்குக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புக்களை ராஜபக்ச மேற்கொண்டார்.

மேற்குலகிற்குச் சார்பாகவும் இந்தியாவுடனான தனது உறவில் விரிசல் ஏற்படாது மிகவும் கவனமாகவும் பின்பற்றிய ஒரு அணிசேரா நாடாகவே சிறிலங்கா விளங்கியது.  இதுவே இதன் பாரம்பரிய வெளியுறவு வட்டமாகும்.

ஆனால் அண்மைய ஆண்டுகளில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவில் விரிசல் ஏற்பட்டது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மறுத்தமை மற்றும் போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு உடன்படாமை போன்ற காரணிகளே ராஜபக்சவுடனான இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் விரிசல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் காரணமாகும்.

ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணத் தொடங்கினார். இதன்மூலம் சிறிலங்காவின் மீள்கட்டுமானத் திட்டங்களை சீன நிறுவனங்கள் மேற்கொண்டன. அத்துடன் சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் ராஜபக்சவின் அரசாங்கம் அனுமதித்தது.

2014ன் பிற்பகுதியில் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகத்தின் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் மிக முக்கிய பாதுகாப்பு பங்காளி நாடாக சிறிலங்கா மாறவுள்ளது என்பதற்கான ஒரு சமிக்கையாக நோக்கப்பட்டது.

ஆனால் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 2015ல்  திடீரென நிறுத்தப்பட்டது.

நவம்பர் 2014ல் ராஜபக்ச, அதிபர் தேர்தலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தார். இத்தேர்தல் மூலம் மீண்டும் தனது ஆட்சியை உறுதிப்படுத்தலாம் என்பதே ராஜபக்சவின் நோக்காகும்.

ஆனால் இவரை எதிர்த்து இவரது அமைச்சர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் சிறிசேன வெற்றிபெற்று நாட்டின் அதிபரானார். இதன்பின்னர் 2015 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ராஜபக்ச போட்டியிட்ட போதிலும் இதிலும் அவர் தோல்வியுற்றார்.

ஆகவே இத்தேர்தல் பெறுபேறுகள் சிறிலங்காவில் ஜனநாயகம் நிலைத்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

ராஜபக்சவின் தேர்தல் தோல்விகளுக்கு சில காரணிகள் கூறப்படுகின்றன. உள்நாட்டுப் போரின் வெற்றியில் மமதை கொண்டமை, தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கம் செய்துகொள்ள மறுத்தமை, ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தவர்களின் ஊழல் மோசடிகள், சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்க காலாக இருந்தமை போன்றனவே ராஜபக்சவின் தேர்தல் தோல்விக்கான காரணிகளாகும்.

சிறிசேனவைப் பொறுத்தளவில் தனது பங்காக தேசிய அரசாங்கத்தின் தலைமைப் பதவியை யார் பெற்றுக்கொள்ள வேண்டுமோ அதற்குச் சார்பாக பணியாற்றியுள்ளார். இதற்காக சிறிசேனவால் ஆற்றப்பட்ட பணியானது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சவைத் தேர்தலில் எதிர்த்து நிற்பதே இவரது பிரதான உடன்பாடாகக் காணப்பட்டது. ராஜபக்சவின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்த மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களை தளர்த்தியதன் மூலம் சிறிலங்காவின் ஆட்சியில் புதியதொரு யுகம் ஏற்படுவதற்கு சிறிசேன தனது நல்லெண்ண சமிக்கையைக் காண்பித்துள்ளார்.

ஒரு பதவிக்காலம் மட்டுமே அதிபராக சேவையாற்றுவதற்கேற்ப அரசியல் யாப்பில் சிறிசேன சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாது, அதிபருக்குள்ள அதிகாரங்கள் பலவற்றை பிரதமரிடம் வழங்கியுள்ளார். நீதிச்சேவைகள், காவற்துறை மற்றும் தேர்தல்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களையும் சிறிசேன உருவாக்கியுள்ளார். ராஜபக்சவின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது ஊழல் மோசடி குற்றங்கள் சுமத்தப்பட்டு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சில முக்கிய நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீண்டும் தேசிய அரசியலுக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்குமான உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டிற்கான ஒரு சுயாதீன உள்நாட்டு ஆணைக்குழு ஒன்று  உருவாக்கப்படுவதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன.

இது சர்ச்சைக்குரிய விடயமாகவே தற்போதும் காணப்படுகின்றது. ஆனால் இது தொடர்பில் சாதகமான சமிக்கைகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் காண்பிக்கின்றது.

சிறிலங்கா தனது அனைத்துலக நிலைப்பாடு என்ன என்பதை மீளவும் தற்போது நிரூபித்து வருகிறது. குறிப்பாக புதுடில்லியுடனான தனது உறவை சமநிலைப்படுத்துவதில் சிறிலங்கா தீவிரம் காண்பிக்கிறது. அதாவது இந்தியாவை அச்சுறுத்துவதற்கான ஒரு தளமாக தன்னைச் சீனா பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்காததன் மூலம் இந்தியாவுடன் சமநிலை உறவைப் பேணிவருகிறது.

சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இவ்வாண்டு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தியாவின் பிரதமர் ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக சிறிலங்காவுக்குப் பயணம் செய்தது இதுவே முதற்தடவையாகும்.

சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டு முதலீடுகளையும் சிறிசேனவின் அரசாங்கம் மீளவும் ஆராய்ந்துள்ளது. குறிப்பாக மிகப்பெரிய சூதாட்ட விடுதிகளைக் கட்டுவதற்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீன நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சிறிலங்கா 2015ல் அதிகாரத்துவ ஆட்சி மற்றும் சமூகப் பிரிவினைகள் போன்றவற்றிலிருந்து விலகி சிறந்த எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது. தென்னாசியாவில் செழிப்புமிக்க நாடாக சிறிலங்கா காணப்படுகிறது.

சிறிலங்கா பல பத்தாண்டுகால போரின் வடுக்களால் பாதிக்கப்பட்ட போதிலும் இன்றும் தென்னாசியாவில் சிறந்த சமூக சுட்டிகளைக் கொண்ட ஒரு செழிப்பு மிக்க நாடாக விளங்குகிறது. அரசியல் உறுதியின்மை காரணமாக 2015ல் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவீதமாகக் காணப்பட்ட போதிலும், 2016ல் இது ஏழு வீதமாகக் காணப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.

அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இதனுடைய பூகோள அமைவிடம், எழுத்தறிவு கூடிய இதன் தொழிலாளர்கள், திறந்த பொருளாதாரம் போன்றன குறைந்த செலவுடன் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒரு கவர்ச்சிமிக்க மையமாக சிறிலங்கா விளங்கும்.

அத்துடன் சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தின் நலன்களை பாரியளவில் பெற்றுக்கொள்ளும் நாடாகவும் சிறிலங்கா உருவாக முடியும். சீனாவின் கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தின் கீழ் சிறிலங்காவில் அபிவிருத்தி கட்டுமான மற்றும் புதிய சிறப்பு உற்பத்தி வலயங்களும் உருவாக்கப்படவுள்ளன.

இவ்வாறு சீனாவுடன் வர்த்தக சார் தொடர்பைப் பேணுவதன் மூலம் சிறிலங்கா, இந்தியாவை விரோதிக்காது என்பதை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. வரும் ஆண்டுகளில் கிழக்காசியாவின் சில பொருளாதாரப் புலிகளுடன் போட்டியிடுவதற்கு சிறிலங்கா தன்னை ‘வங்கப்புலியாகத்  ‘Bengal Tiger’    தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும்.

* David Brewster is a Visiting Fellow at the Strategic and Defence Studies Centre, The Australian National University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *