மேலும்

அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு படையெடுப்பது ஏன்? – பீரிஸ் கேள்வி

g.l.peirisசிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் குறித்து, சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ் , நாடு தற்போது அமெரிக்காவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

“நாட்டின் திசை தவறான பக்கம் திரும்பியுள்ளது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் குறுகிய காலத்தில் அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கைக்கு படையெடுக்கின்றனர்.

பொதுத்தேர்தலின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் வந்தார், அவரைத் தொடர்ந்து ஜோன் கெரி வந்தார், அதன் பின்னர் ரொம் மாலினோவ்ஸ்கி, சமந்தா பவர், தோமஸ் சானொன் என தொடர்ச்சியாக அமெரிக்க இராஜதந்திரிகள் கொழும்பு வந்தனர்.

கடந்த நான்கு மாதகாலத்தில் ஐந்து அமெரிக்க இராஜதந்திரிகள்  கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களின் இந்த தொடர் படையெடுப்பு எதற்காக என்று தெரியவில்லை. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாப மாத்திரமே இன்னும் வரவேண்டியுள்ளது. மற்றைய அனைவரும் வந்துள்ளனர்.

இவர்களின் தொடர் வருகையில் எமக்கு சந்தேகம் உள்ளது. இவர்களின் இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில் பாரிய உடன்படிக்கைகள் உள்ளன.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் நான்கு நாட்களுக்குள் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு  பயணம் மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் அமைச்சரவை கூட பொறுப்பேற்கவில்லை.

நிஷா பிஸ்வாலுடன் பேச்சு நடத்துவதற்காக மூன்று அமைச்சர்களுக்கு மாத்திரம் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.  அந்தளவுக்கு இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அடிமைகளாக மாறியுள்ளது.

நாம்  அமெரிக்காவின் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளோம், எமது நாட்டையும் மக்களையும் அவர்களின் கட்டளையின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.

ஆசிய பசுபிக் வலயத்தில் தமது இராணுவத் தளங்களைப் பலப்படுத்தும் நோக்கத்தில் கடந்த காலத்தில் அமெரிக்கா பாரிய முயற்சிகளை முன்னெடுத்தது.

அதேபோல் இந்த இராணுவத் தளங்களை அதி பாதுகாப்பு வலயங்களாக மாற்றவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்போது அந்த முயற்சிகள் அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. அதாவது சிறிலங்காவும் இப்போது அமெரிக்காவின் துணை நாடாக மாறியுள்ளதால் அவர்களின் இலக்கு இலகுவாக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதானமாக திருகோணமலை துறைமுகம் தான் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய வலயத்தில் மிகவும் பாதுகாப்பான மையமாகவே திருகோணமலை கருதப்படுகிறது. அதை இலக்கு வைத்தே இந்த முயற்சிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீண்டும் எமது நாட்டினுள் இன்னொரு நாட்டின் தளங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் மறுபக்கம் பொருளாதாரத்தை இலக்குவைத்து எமது வளங்களை சுரண்டும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

ஆகவே அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் மூலமாக முன்னெடுக்க வேண்டும்.

அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்து அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்ற முயற்சித்தாலும் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் ஒருபோதும் அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *