மேலும்

அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் நுழைகிறது இந்தியா

பாதுகாப்பு கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக தவிர்த்து வரும் இந்தியா தற்போது ஜப்பானுடன் மேற்கொண்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் உள்நுழைவதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு, bloomberg.com ஊடகத்தில், Natalie Obiko Pearson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம்  செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பானியப் பிரதமர் சின்சோ அபேயும் கடந்த வாரஇறுதியில் புதுடில்லியில் வைத்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இது ஜப்பான், இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார, இராணுவ மற்றும் மூலோபாய உறவுநிலையில் எவ்வளவு நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையே சுட்டிநிற்கிறது.

சீனாவின் செல்வாக்கு  ஆசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிலையிலேயே,  இவ்விரு நாடுகளும் தமக்கிடையில் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

‘மோடி மற்றும் அபே ஆகிய இரு தலைவர்களும் மிகவும் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்: நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குள் காலடி எடுத்து வைப்பதற்காகவே தற்போது எமக்கிடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளோம். சீனாவின் நெருக்கடிகள் எமக்கு ஆபத்தாக உள்ள போதிலும் நாங்கள் சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம் என்கின்ற செய்தியையே இரு நாட்டுத் தலைவர்களும் எடுத்துரைத்துள்ளனர்’ என வோசிங்டனிலுள்ள வூட்ரோ வில்சன் மையத்தின் மூத்த அதிகாரி மைக்கேல் குகேல்மன் குறிப்பிட்டுள்ளார்.

2007லிருந்து தனிப்பட்ட ரீதியாக உறவைப் பேணி வரும் மோடி மற்றும் அபே ஆகிய இரு தலைவர்களும் தமது நாட்டின் பொருளாதார மற்றும் இராணுவத் துறைகளைப் பலப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தேடிவரும் பழமைவாத தலைவர்களாகக் காணப்படுகின்றனர்.

2022ல் உலகின் மிகப் பலம்பொருந்திய நாடாக சீனாவை உருவாகவிடாது தடுப்பதற்காக ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு ஆசிய நாடுகளும் சீனாவிற்குச் சவாலாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

ஜப்பானிடம் நிறையப் பணம் உள்ளது, அத்துடன் இந்தியாவானது தற்போது வளர்ந்துவரும் சந்தைப் பலத்தைக் கொண்டுள்ளது. ஆகவே இவ்விரண்டும் தமது வளங்களைப் பயன்படுத்தி கூட்டாக பணியாற்றுவதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன.

போருக்குப் பின்னான ஏழு பத்தாண்டுகள் வரை ஜப்பான் அமைதி பேணிவந்துள்ள நிலையில் தற்போது அபே தனது ஆட்சிக்காலத்தில் ஜப்பானின் இராணுவப் படைகளைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இதேவேளையில், இந்திய மாக்கடலில் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக இந்தியா தனது கடற்படையைப் பலப்படுத்துவதற்காக 60 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் நோக்கத்திற்கும் ஆதரவாக உள்ளது.

குறிப்பாக தென்சீனக் கடலின் ஆதிக்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சீனாவால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை எதிர்த்து ஆசிய நாடுகளை ஒன்றிணைப்பதற்கான அமெரிக்காவின் மூலோபாய நலனை அடைந்து கொள்வதற்கு ஜப்பான் மற்றும் இந்தியாவின் கூட்டு ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாக உள்ளது.

‘ஆசியாவினதும் இந்திய மாக்கடல் பிராந்தியத்தினதும் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துவதற்கு தற்போது ஜப்பானுடன் இந்தியா இணைந்து மேற்கொண்டுள்ள மூலோபாய பங்களிப்பை விட வேறென்றும் சிறந்ததாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன். அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் சில ஒப்பந்தங்கள் உண்மையில் வரலாற்று ரீதியான அல்லது நாடுகளுக்கிடையிலான உறவைப் பலப்படுத்துவதாக அமைந்துள்ளமை உறுதியானதாகும். இந்தவகையில் ஜப்பானியப் பிரதமராகிய தங்களது வருகையும் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளது என்பது உண்மையாகும்’ என மோடி, அபேயுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை வெளியிட்ட கூட்டு ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த அபேயின் மூன்று நாள் இந்தியப் பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

குறிப்பாக 15 பில்லியன் டொலரில் ஜப்பானின் உதவியுடன் இந்தியாவின் முதலாவது அதிவேக தொடருந்துப் பாதை அமைத்தல், அணுவாயுதக் கூட்டு ஒப்பந்தம், 12.4 பில்லியன் டொலர் பெறுமதியில் இந்தியாவில் ஜப்பானிய நிதி மற்றும் ஏற்றுமதி காப்புறுதி முதலீடு, இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பில் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இந்தியாவின் வடகிழக்கில் ஜப்பானிய நிதியுதவியுடன் வீதிகளைப் புனரமைத்தல் போன்ற பல்வேறு உடன்பாடுகள் இந்தியப் பிரதமர் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஆகியோரால் எட்டப்பட்டது.

பாதுகாப்பு கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக தவிர்த்து வரும் இந்தியா தற்போது ஜப்பானுடன் மேற்கொண்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் உள்நுழைவதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து ‘இந்திய-பசுபிக் பிராந்தியாங்களின்’ கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் மலபார் கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் ஜப்பானும் உறுப்பினராக இணைந்து கொள்ளும் என இரு நாட்டுத் தலைவர்களாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து கடந்த ஒக்ரோபரில் ஜப்பானும் மிகவும் சிக்கலான கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் அதிதியாக இணைந்து கொண்டதன் பின்னர் தற்போது இந்த மூன்று நாடுகளும் தமக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் றிச்சார்ட் வர்மா கடந்த வாரம் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு, அமெரிக்காவின் பிறிதொரு நட்பு நாடான அவுஸ்திரேலியாவுடன் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியன இரண்டாம் கட்ட முத்தரப்பு இராஜதந்திரப் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளன.

ஜப்பானின் US-2    ஈரூடக விமானத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஏற்கனவே நீண்டகாலமாக நிலுவையிலுள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு சார் தகவல்களைப் பரிமாற்றக் கூடிய ஒப்பந்தங்களிலும் மோடி மற்றும் அபே கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளையில் இந்தியாவோ அல்லது ஜப்பானோ தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஏனெனில் ஆசியாவின் மிகவும் பலம்பொருந்திய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியன பிறிதொரு பிராந்திய முரண்பாடுகளைக் கொண்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

கிழக்கு சீனக் கடலிலுள்ள தீவுகளை உரிமையாக்கிக் கொள்வதில் ஏற்கனவே ஜப்பானுடன் சீனா முரண்பாட்டைக் கொண்டுள்ளது. சிறிலங்காவில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களைத் நிறுத்தி வைத்திருந்தமை மற்றும் பாகிஸ்தானில் துறைமுகம் ஒன்றை அமைத்தல் போன்றன தொடர்பில் ஏற்கனவே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

‘இந்திய-பசுபிக் பிராந்தியத்திலும் அதற்கப்பாலும் அமைதியான, திறந்த, சமத்துவமான, நிலையான, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை மேற்கொள்ளுமாறு’ மோடி மற்றும் அபே தமது கூட்டு அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் தமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. சீனாவுடன் ஜப்பான் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கையின் ஐந்து சதவீதம் மட்டுமே இந்தியாவுடனான ஜப்பானின் வர்த்தக நடவடிக்கையாகும், அத்துடன் இது இந்திய-சீன வர்த்தக நடவடிக்கையின் கால்வாசிக்கும் குறைவானதாகும்.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் இராணுவ உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சிடம் வினவியபோதும் இது தொடர்பில் பதில் வழங்கப்படவில்லை.

‘யாருடன் ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கின்ற உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு’ என சீன வெளியுறவு அமைச்சின் பெண்பேச்சாளர் குவா சுன்சிங்க், டிசம்பர் 09 அன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் நிலுவையிலுள்ள தொடருந்து திட்டம் தொடர்பாக வினவியபோதே சீனப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் வீதிகள் மற்றும் பல்வேறு கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதில் போரால் பாதிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.

அண்மைய மாதங்களில், சீனாவுடனான ஐந்து பத்தாண்டு கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய எல்லைப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆறு பில்லியன் டொலர் பெறுமதியில் தொடருந்துப் பாதை ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும் இந்தியா கொண்டுள்ளது.

2010இலிருந்து சமரச உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒத்துழைப்பையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அணுவாயுதத்தால் பாதிக்கப்பட்ட ஒரேயொரு நாடான ஜப்பான் இந்தியாவிடமிருந்து தனக்குப் பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக அணுவாயுத பரவலைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு கோரி வந்துள்ளது.

ஆனாலும் இது தொடர்பான முக்கிய பணி நிறைவேறியுள்ளது என வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அணுவாயுத சோதனை நடவடிக்கையில் ஜப்பானின் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இது பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவுப் பேச்சாளர் யசுகிசா கவமுறா, புதுடில்லியில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியன இணைந்து பணியாற்றுவது வரவேற்கத்தக்க விடயமாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வரையறுக்கப்பட்ட உறவுநிலையானது இந்த நூற்றாண்டின் மிகப் பிரதானமான ஒன்றாகக் காணப்படுகிறது’ என வோசிங்ரனைத் தளமாகக் கொண்டியங்கும் ஹூட்சன் நிறுவகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குனர் அபர்ணா பண்டே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *