மேலும்

பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

sumanthiranகாணாமற்போனோர் குறித்து விசாரணைகளை நடத்தும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களாக பரணகம ஆணைக்குழு, காணாமற்போனோர் குறித்த சாட்சியப்பதிவுகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சுமந்திரன்.

“அனைத்துலக அனுசரணையாளர்களுடன் மேற் கொள்ளப்படும் நீதி விசாரணையின் தன்மையும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் நோக்கமும் வேறுபட்டதாகும்.

சில வேளைகளில் பரணகம ஆணைக்குழுவின் தற்போதைய விசாரணை அறிக்கை பின்னர் வரவுள்ள அனைத்துலக பங்களிப்புடன் நடத்தப்படவுள்ள நீதி விசாரணைக்கு உதவியாக இருக்கலாம்.

ஏனெனில் தற்பொழுது பதிவு செய்யப்படுகின்ற விடயங்கள் அப்படியே கைவிடப்படவும் முடியாது. அவற்றை மூடி மறைக்கவும் முடியாது.

அனைத்துலக பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற நீதி விசாரணையில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம்.

மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளக்கூடாது என்பது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதைத்தான் நாங்களும் வலியுறுத்தி னோம்.அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எவ்விதமான நம்பிக்கை கொண்டவர்களாகவும் மக்கள் காணப்படவில்லை.

அதனுடைய விசாரணை முறைகள் நம்பிக்கையீனங்களையே கொண்டுள்ளது எனக் கூறியிருந்தோம்.

பரணகம அறிக்கை மற்றும் உடலகம அறிக்கைகள் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. அதன் பின்னர் பரணகம விசாரணைகள் ஏன் தொடரப்பட வேண்டுமென்ற சந்தேகமும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றில் இத்தகையதொரு வினாவை நான் கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு பதில் தரப்படவில்லை. பதில் கேட்கப்பட்ட போதும் அரச தரப்பினர் மௌனம் சாதித்தார்கள்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *