மேலும்

புலிகளுடன் போரிட்ட முல்லைத்தீவுக்குச் செல்கிறார் இந்திய இராணுவத் தளபதி

Dalbir Singhசிறிலங்காவுக்கு இன்று பயணத்தை மேற்கொள்ளும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

ஐந்து நாள் பயணமாக சிறிலங்கா வரும், இந்திய இராணுவத் தளபதி, முல்லைத்தீவு, காலி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், 1987ஆம் ஆண்டு, இந்திய அமைதிப்படையில், சிறிலங்கா வந்திருந்தார்.

அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்தியப் படைகளுக்கு முல்லைத்தீவு காட்டுப் பகுதி பெரும் சவாலானதாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் மறைந்திருந்த முல்லைத்தீவு காட்டுப் பகுதியில், அவர்களைத் தேடியழிக்கும் நடவடிக்கையில், இந்தியப் படையினர் பெரும் பின்னடைவுகளையும்,இழப்புகளையும் எதிர்கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, ஜெனரல் தல்பீர் சிங் சுகக் கின் கூர்க்கா படைப்பிரிவு, ஒரே நேரத்தில் கட்டளை அதிகாரி உள்ளிட்ட 20 பேரை இழந்ததை குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவத் தளபதியுடன் அவரது துணைவியார் நர்மிதா சுஹக் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பிரமித் சிங், பிரிகேடியர் கோபால் குருங், கேணல் அமிதாப் ஜா, கப்டன் சரஸ்வத் ஆகியோரும், சிறிலங்கா வரவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *