மேலும்

அமெரிக்காவின் சொல்லாட்சியை மாற்ற வேண்டிய தருணம் இது – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐ.நாவுக்கான  அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் நவம்பர் 18ஆம் நாள் தொடக்கம் தொடக்கம், 23ஆம் நாள் வரை இந்தியா மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை,  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் சமந்தா பவர், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

பூகோள அரசியல் ரீதியாக நோக்கில் சிறிலங்காவுக்கான சமந்தா பவரின் வருகை மிகவும் முக்கியமானதாகும். ‘சிறிலங்காவிற்குப் பயணம் செய்யும் பவர், சிறிலங்காவுடன் அமெரிக்கா தனது இரு தரப்பு உறவுநிலையை வலுப்படுத்துவதை முதன்மைப்படுத்துவார்.

அத்துடன் சிறிலங்காவின் மீளிணக்கப்பாடு, பொறுப்புக்கூறல், நிலையான சமாதானம் போன்றவற்றை எட்டுவதற்கு அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்கும் என்பதையும் வலியுறுத்துவார்.

கொழும்பில், இவர் சிறிலங்காவின் மூத்த அரசியல் அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இளையோரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்’ என ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது, பவர் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தையும் பார்வையிடுவார். யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுர் அரசாங்க அதிகாரிகள், நிறுவனங்கள், போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பார்.

அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களுடன் சமந்தா பவர் சந்திப்பை மேற்கொள்வார். போரின் போது தாக்குதலுக்கு உட்பட்ட உதயன் நாளிதழின் தலைமைக் காரியாலயத்தையும் சமந்தா பவர் பார்வையிடுவார். போரின் போது அழிவடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலும் தூதுவர் பவர் கலந்துகொள்வார்.

மற்றும் யாழ்ப்பாண நூலகத்தையும் சமந்தா பவர் பார்வையிடுவதுடன், புராதன தமிழ் ஆவணங்களைப் பேணிப்பாதுகாப்பதற்காக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என்பதையும் யாழ்ப்பாண நூலகத்திற்கான தனது பயணத்தின் போது சமந்தா பவர் அறிவிப்பார்’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமந்தா பவரின் இந்த நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கிற்குப் பயணம் செய்வது உள்ளடக்கப்பட்டுள்ளதானது பாதிக்கப்பட்ட மக்களை  ஊக்குவிப்பதற்கான ஒரு சமிக்கையாக நோக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்திலுள்ள பல அதிகாரிகளைப் போல சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவரால் முன்னர் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையவில்லை என்பது கெட்டவாய்யப்பாகும்.

ஆகவே சமந்தா பவரின் சிறிலங்காவுக்கான பயணத்தை பராக் ஒபாமா அரசாங்கமானது சிறிலங்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து, சிறிலங்காவின் நகர்வுகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கி வருவதானது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே சிறிலங்கா தொடர்பில்  அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான தக்க தருணமாக சமந்தா பவரின் வருகை அமைந்துள்ளது. இதனை ஒபாமா நிர்வாகம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

அவசியமான சீர்திருத்தங்கள் தொடர்பாக எவ்வித தெளிவான தேசியத் திட்டம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கவில்லை என கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் பத்திரிகையாளர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக சமந்தா பவர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும். சில அரசியற் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான அரசியற் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியற் கைதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் ‘புனர்வாழ்வு’ நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினையாகும்.

இதற்கப்பால், சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டமானது அனைத்துலக நியமங்களுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது. மனித கண்ணியத்திற்குத் தேவையான அடிப்படைக் காரணிகளைக் கொண்டிராத இத்தகைய சர்ச்சைக்குரிய புனர்வாழ்வுத் திட்டத்தில் பங்கெடுப்பதில் எவ்வித பயனுமில்லை.

ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதானது வரவேற்கப்படத்தக்க விடயம் எனவும், எனினும் இது முழுஅளவில் நீதியான செயற்படாக அமையவில்லை எனவும் மனித உரிமை ஆர்வலரான  ருக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமானது எவ்வளவு அரசியற் கைதிகள் உள்ளனர், இவர்கள் எவ்வளவு காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் ஒவ்வொருவரதும் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும்.

இவ்வாறு வெளியிடுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது கைதிகள் விடயத்தில் இதயசுத்தியுடன் செயற்படுகின்றதை உறுதிப்படுத்த முடியும் என ருக்கி பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் நீதி முறைமையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக சமந்தா பவர் வலியுறுத்த முடியும்.

தற்போது நீதி முறைமை எந்தளவில் உள்ளது மற்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் சட்டச் சீர்திருத்தம் தொடர்பாக எவ்வளவு விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டும் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் வாழும் சமூகப் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் எவ்வாறு ஆலோசிக்கப் போகின்றது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமந்தா பவர் தெளிவுபடுத்த வேண்டும்.

‘இராஜதந்திர மென்போக்குகளுக்கு அப்பால் சமந்தா பவர் சிறிலங்கா அரசாங்கத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான வினாக்களை வினவவேண்டும்.

அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா எவ்வளவு தூரம் ஜெனீவாவின் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது, இதில் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்றன தொடர்பாக சமந்தா பவர் முன்னுரிமைப்படுத்த வேண்டும்’ என மனித உரிமை ஆர்வலர் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் சிறிசேன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்திப்படுவதாக உணர்த்துவதன் மூலம் ஒபாமா அரசாங்கம், சிறிலங்காவின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக பவரின் சுற்றுப்பயணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘பொருளாதார ரீதியாக பலமற்ற ஒரு அரசாங்கம் தனது நாட்டிலுள்ள சமூகப் பிரச்சினைகளைச் சமநிலைப்படுத்துவதென்பது மிகவும் கடினமானதாகும். குறிப்பாக சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது பெரும்மையினர் இதற்கு எதிராகவே நிற்பார்கள்’ என ஊடகவியலாளர் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே சிறிசேன அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் தயக்கம் காண்பிக்கின்றது.

சிறிசேன ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் கடந்த நிலையில் இவரது அரசியல் உறுதிப்பாடு கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே சிறிசேன அரசாங்கம் தனது நல்லாட்சியை உறுதிப்படுத்த முடியும்.

இந்நிலையில் சமந்தா பவரின் சிறிலங்காவுக்கான சுற்றுப்பயணமானது அமெரிக்க அரசாங்கம் சிறிலங்கா தொடர்பில் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுப்பதற்கான ஒரு ஆரம்பக் குறியீடாக அமையலாம். இந்த வாய்ப்பை பவர் சரியாகப் பயன்படுத்துவார் என நாம் நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *