மேலும்

கோத்தாவைப் பாதுகாக்கும் அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குமா?

gotabhaya-rajapakseகோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் வரும் நாட்களில் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த செப்ரெம்பரின் இறுதியில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகளுக்கான பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது சிறிலங்காவில் எவ்வளவு தூரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காக சமந்தா பவர் தனது பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா பவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சிறிலங்கா அதிபர் தனக்கு உறுதிமொழி ஒன்றை வழங்கியுள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார். இராணுவப் படைகளின் நம்பிக்கைக்குத் துரோகமிழைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் தான் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டேன் என கோத்தபாயவிடம்  சிறிலங்கா அதிபர், உறுதிமொழி வழங்கியுள்ளார்.

சிறிலங்கா அதிபருடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச ஊடக மாநாடொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் படைத்துறை அதிகாரிகள், அதிபர் சிறிசேனவைச் சந்தித்த போது தாம் தர்மசங்கடத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமை தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை என்று  அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவை சிறிசேன சந்தித்த அதேநாளன்று, முன்னாள் திறைசேரிச் செயலர் கலாநிதி.பி.பி.ஜெயசுந்தர மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் சிறிசேனவைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை எனவும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சீன நிதியைப் பெற்றுக் கொள்வதாக இந்த நாடுகள் பிரேரித்துள்ளதாக கலாநிதி ஜெயசுந்தர சுட்டிக்காட்டியிருந்தார்.

இங்கு கூறப்படும் கலாநிதி ஜெயசுந்தர என்பவர் நீதிமன்றால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேபோன்று வீரதுங்கவும் நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது கோத்தபாயவை விசாரணை மேற்கொள்கிறது. அத்துடன் இவரைக் கைதுசெய்ய வேண்டாம் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கோத்தபாயவுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நீதிமன்ற அறிவிப்பின் பேரில் லலித் வீரதுங்க நீதவான் நீதிமன்றின் முன் நிறுத்தப்படாது, இவரைக் கைது செய்ய முடியாது என உச்ச நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது நீதவான் ஒருவரால் விமர்சிக்கப்பட்டது.

மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவால் கோத்தபாய, சிறிலங்கா அதிபர் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.

மகிந்த ஆதரவாளர்களும் நிதி ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யப்பட்டவர்களும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குள் தற்போதும் செயற்படுகிறார்கள் என்பதற்கான சிறந்ததொரு தெளிவான எடுத்துக்காட்டாக இது காணப்படுகிறது.

வடக்கில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் கோரப்பட்ட போர்க் குற்ற விசாரணை போன்றவற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.

கோத்தபாயவும் இந்தியாவை சிறிலங்காவின் எதிரி நாடாகவே நோக்குகிறார். அவன் கார்ட் சர்ச்சை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு தான் அனுமதியளிக்க மாட்டேன் என விஜயதாச ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்டவரும் இந்த நாட்டிற்கு அளப்பரிய சேவையை வழங்கியவருமான கோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?

போர்க் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை சட்டமா அதிபர் திணைக்களம் கொண்டுள்ளது.

இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரான விஜயதாச ராஜபக்ச, கோத்தபாயவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் ஏன் அமைதி காக்கிறது என்கின்ற சந்தேகம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மத்தியில் தற்போது வலுத்துள்ளது.

இந்நிலையில் எவ்வாறு மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியும்?

ராஜபக்ச நிர்வாகத்தில் இடம்பெற்ற மோசடிகளை சட்டமா அதிபர் திணைக்களம் மூடிமறைப்பதாக அரசாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு அரசாங்கத்திடமிருந்து சமந்தா பவர் மீளிணக்கப்பாட்டை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதாபிமானம் நிர்மூலமாக்கப்பட்டமை தொடர்பாக ‘நரகத்திலிருந்து ஒரு பிரச்சினை’ என்கின்ற தலைப்பில் சமந்தா பவர் எழுதிய நூலானது தற்போது பிரபலமடைந்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவுக்கான தனது அரசமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சமந்தா பவர் ‘யகலப்பலனயா (நல்லாட்சி) நரகத்திலிருந்து ஒரு பிரச்சினை’ என்பது தொடர்பாக கலந்துரையாட வேண்டியேற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *