மேலும்

உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேசும் தருணம் இதுவல்ல – மாவை சேனாதிராசா

mavai-senathirajahஉள்ளக முரண்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக அவுஸ்ரேலிய ஊடகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட குற்றச்சாட்டுகள், அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை, இந்த அறிக்கைக்கு பதில் கொடுத்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன, தமிழ் மக்களிடையே குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையிலேயே உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக, இருவரும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையில் ஊடகங்களில் இத்தகைய பகிரங்க விவாதங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது.

இவர்கள் தமக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக, பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும்.

அதற்குரிய நடவடிக்கைகளை கட்சிக்குள் அல்லது அமைதியான முறையில் முன்னெடுத்திருக்க வேண்டும்.

இவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக கட்சிக்குள் கலந்துரையாடி தீர்வுகாண, எதிர்வரும் நாட்களில்  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில்,  இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல், உரிமைகள், அபிலாசைகளைப் பெற்று பாதுகாப்பான சமுகமாக எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குரிய நிரந்த சூழலை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் நாம் கவனம் செலுத்தி அதற்குரிய முன்னகர்வுகளைச் செய்யவேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் உள்ளக கருத்து முரண்பாடுகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் விவாதிப்பது பொருத்தமற்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *