மேலும்

காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்

mullaitivu beachபோரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு livemint ஊடகத்தில், Sachin Bhandary எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா இராணுவத்தினரால்  தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், போரின் நிழல்கள் தற்போதும் சிறிலங்காவின் வடக்கில் பரவிநிற்பதைக் காணலாம்.

கடந்த ஆண்டு வரை அதாவது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சிறிலங்காவை ஆட்சி செய்த காலத்தில், போரால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிடுவதற்கு பல்வேறு பாதுகாப்புத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அதாவது மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்ற பின்னர் இந்த நிலை மாற்றமடைந்துள்ளது.

போர் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது முதன் முதலாக வடக்கிற்கான போக்குவரத்துத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் வடக்கிற்கான அனைத்துலக சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

ஏனெனில் தெற்கில் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுமான வசதிகள் போன்று வடக்கில் இன்னமும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை.

mullaitivu beach

ஆனாலும் தென்ளிலங்கையைச் சேர்ந்த பயணிகள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கைப் பார்வையிடுவதற்காக அதிகளவில் பயணிக்கின்றனர்.

வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் இன்னமும் சிறிலங்காப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் நிலைகொண்டுள்ள இளம் இராணுவத்தினர் சிவில் பணியாளர்களுடன் துடுப்பாட்டம் விளையாடுவதைக் காணலாம். ஆனாலும் இவர்கள் அதிகளவில் தமிழர் பிரதேசத்தில் பிரசன்னமாகியுள்ளமை தற்போதும் போர் இடம்பெற்றதை நினைவூட்டுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம்.  அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

போர் இறுதியாக இடம்பெற்ற முல்லைத்தீவும் போருக்கான பல்வேறு நினைவுகளை சுமந்து நிற்கிறது. போர் வெற்றி நினைவுச் சின்னம், போர் அருங்காட்சியகம், கடற்புலிகளின் நீச்சல் தடாகம் போன்றன தெற்கு சிங்கள சுற்றுலாப் பயணிகளை கவருகின்ற நினைவுச் சின்னங்களாகக் காணப்படுகின்றன.

பெரும்பாலான சிங்களவர்கள் போர் இடம்பெற்ற வலயத்தை முதற் தடவையாகப் பார்வையிடுகின்றனர்.

‘பயங்கரவாதிகளின் இந்த இடங்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளன’ என ஹிக்கடுவவைச் சேர்ந்த பெண்ணொருவர் வடக்கிற்கான தனது கன்னிப் பயணத்தின் போது தெரிவித்தார். ஆனாலும் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பாதை இன்னமும் நீண்டு செல்வதாகவும் இதனைச் செப்பனிட வேண்டிய தேவையுள்ளதாகவும் இந்தப் பெண்மணி தெரிவித்தார்.

பொங்கல் தினமன்று நான் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தேன். முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கே பக்தர்கள் பெருமளவில் காணப்பட்டனர். அத்துடன் குளிர்களி நிலையங்களும் காணப்பட்டன.

இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். ஆனாலும் இந்தப் பகுதியிலும் போரின் நிழல்கள் காணப்படுகின்றன.

‘முன்னர், பொங்கல் தினமன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வானூர்திகளில் இருந்தவாறு வற்றாப்பளை அம்மன் ஆலயம் மீது மலர்களைத் தூவி தமது வழிபாட்டை மேற்கொள்வார்கள். தற்போது இதே விடயத்தை சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொள்கின்றனர்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் அதிருப்தியுடன் தெரிவித்தார்.

jaffna fort

காங்கேசன்துறை அல்லது கே.கே.எஸ் என்ற இடத்தில் போரின் தாக்கத்தை இன்னமும் காணலாம். இங்கு பல்வேறு வெறுமையான வீடுகள் காணப்படுகின்றன.

கீரிமலை நகுலேஸ்வரம் கோவில், கீரிமலைக் கேணி, மாதகல் மாதா தேவாலயம், யம்புகோலப் பட்டிணம் போன்ற பல்வேறு முக்கிய இடங்கள் காங்கேசன்துறையில் காணப்படுகின்ற போதிலும் இன்னமும் போரினால் சிதைவடைந்த கட்டடங்களை நாம் இங்கு காணமுடியும்.

சிறிலங்காவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள திருகோணமலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் தென்படுகின்றன. திருகோணமலை உண்மையில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு மையமாகக் காணப்படுகின்றது. இதனால் உள்ளுர் வாசிகள் தமக்கான பொருளாதார நலனைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

போரின் வடுக்கள் திருகோணமலையில் காணப்படுகின்ற போதிலும், வெள்ளை மணல்களைக் கொண்ட கடற்கரைகளும், நிலவெளி மற்றும் உப்புவெளி போன்ற கடற்பிரதேசங்களும் இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்ற இடங்களாகக் காணப்படுகின்றன.

இதேபோன்று பாறையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் சிவன் கோவிலில் நின்று பார்க்கும் போது இந்திய மாக்கடலின் சிறந்த தோற்றங்களைப் பார்க்க முடியும்.

முன்னர் இராணுவத்தினருக்கும் கொரில்லாக்களுக்கும் மட்டுமே திறந்து விடப்பட்ட இடங்கள் இன்று சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றன.

காலப் போக்கில் சிறிலங்காவின் வடக்குப் பிரதேசமானது தெற்கைப் போன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாக மாறும்.

எனினும், அதுவரை, சிறிலங்காவின் வடக்குப் பகுதியானது வலிநிறைந்த அழகைப் பிரதிபலிக்கும் ஒளிமங்கிய மண்டலமாகக் காணப்படும்.

ஒரு கருத்து “காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்”

  1. marimuthu says:

    viduthalai veerarkalai paynkaravaathikalaga paarkkum kalaachcharam irukkumvarai eppadi oli thoonturhum?

Leave a Reply to marimuthu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *