மேலும்

அவன் கார்ட் நிறுவனம் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பு – சிறிலங்கா அதிபர் உத்தரவு

avant-garde-mahanuwara-shipஅவன் கார்ட் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்பாடுகளை ரத்துச் செய்து, குறித்த நிறுவனம் முன்னெடுத்து வந்த அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அவன் கார்ட் விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கடந்த 09ஆம் நாள் நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், அவன் கார்ட் நிறுவன விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோருடன் காவல்துறை மா அதிபர் என்.கே.இலங்ககோன், கடற்படை தளபதி ரவீந்திர  விஜேகுணவர்த்தன, சட்டமா அதிபர் யுவஞ்சன வணசுந்தர, ரக்ன லங்கா நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“இந்த கூட்டத்தில், கடற்படைத் தளபதியினால் ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும், அதன் சட்ட விரோத ன்மை குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இதையடுத்து அவன் கார்ட் நிறுவனத்துடனான அனைத்து உடன்பாடுகளையும் ரத்து செய்து அவர்கள் முன்னெடுத்து வந்த அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படையினர் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.

அதற்கு இணக்கம் தெரிவித்த சிறிலங்கா கடற்படைத் தளபதி, தம்மால் அதனைச் செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

உடனடியாக இந்த உத்தரவு நடை முறைக்கு வருகிறது. அதன்படி கடற்படை இந்த நடவடிக்கையை அவர்களுக்குள் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும்” ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *