மேலும்

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் பகிரங்கமாக வெடித்தது மோதல்

rajitha senaratneஅவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம், தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் நிலவிய முரண்பாடுகள் பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பாக, அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்சவும், திலக் மாரப்பனவும், நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் விடயத்தில் நடந்துள்ள ஊழல்கள் தொடர்பில் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை.

நாம் புதிய அரசாங்கத்தை அமைத்த சந்தர்ப்பத்தில் இருந்தே இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.

இந்த மோசடிகளை சரியாக விசாரிக்கும் பட்சத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவைக் கூட கைது செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

அந்தளவிற்கு மோசமான வகையில் இந்த அவன்கார்ட் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆரம்பத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், மற்றும் எதிர்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் தேசிய நிறைவேற்று சபையில் விவாதித்தனர்.

பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற முக்கிய சந்திப்புகளின் போதும் இந்த ஊழல் மோசடிகளை உரிய வகையில் கையாளவேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆகவே அவன்கார்ட் விடயத்தில் அடுத்த நிறைவேற்று சபைக் கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

அந்த நம்பிக்கையில் அடுத்த கூட்டத்திலும் கேள்வி எழுப்பினோம். அப்போதும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முக்கிய நபர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இரண்டு அமைச்சர்களையும் நியமித்தனர். அந்த அமைச்சர்களில் ஒருவர் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எதிர்தரப்பு சார்பில் வழக்கில் வாதாட சென்றுவிட்டார்.

ஆகவே இந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே எதோ ஒரு வகையில் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த பிரதான காரணமானது இந்த நாட்டின் ஊழல் காரர்களை தண்டிக்க வேண்டும் என்பதாகும்.

மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சுகபோகமாக வாழும் ஆட்சியை வீழ்த்தி உரிய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

அந்த ஒரு நோக்கத்திற்காகவே சிவில் அமைப்பினர், மக்களும் எம்முடன் கைகோர்த்தனர். ஆனால் எதற்காக இந்த ஆட்சியை அமைத்தோமோ அந்த காரியம் மறக்கடிக்கப்பட்டு ஊழல் காரர்களையும் மோசடிக்காரர்களையும் காப்பாற்றும் நிலைக்கே இந்த அரசாங்கமும் தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

மகிந்த ஆட்சியில் நாம் அரசாங்கத்தை கொண்டு நடத்திய வேளையில் அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒரு சிலர் மகிந்தவிற்காக வேலைசெய்து வந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசியங்களை மகிந்தவிடம் கூறி பணம் சம்பாதித்தனர். அப்போதும் கட்சியை காட்டிக் கொடுத்து மோசடிகளை செய்த நபர்கள் இன்று இந்த அமைச்சரவையிலும் உள்ளனர்.

அமைச்சுப் பதவிகளையும் பொறுப்புகளையும் வைத்துக் கொண்டு தம்மை நல்லவர்கள் போல் வெளிக்காட்டி வருகின்றனர்.

அதேபோல் அதிபர் தேர்தல் முடிந்த இரண்டாவது நாள், ஜனவரி 10ஆம் திகதி அவன்கார்ட் நிறுவனத்துடன் ஒருசிலர் உடன்படிக்கைகளை செய்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு இந்த ஊழலை மூடி மறைக்க இவர்கள் பாரிய நிதிக் தொகையை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஊழல் தொடர்பான உண்மைகளை மூடிமறைக்க அரசாங்கத்தில் இருந்துகொண்டு இயங்கி வரும் மோசடிக்காரர்கள் தொடர்பிலும் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோல் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் பலர் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் அவன்கார்ட் ஊழல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் இறுதி அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவர்களது செயற்பாடுகளிலும் குறித்த ஒருசில அமைச்சர்களின் தலையீடு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் திலக் மாரப்பன ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு முரணான வகையிலேயே அவர்கள் உரையாற்றினர். இவர்களின் கருத்தை அரசாங்கத்தின் தீர்மானமாகக் கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது.

அவன்கார்ட் மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதேபோல் அவர்களின் பின்னணியில் இருந்து செயற்படும் அரசங்கத்தில் இருக்கும் நபர்களையும் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே இந்த விடயங்கள் குறித்து தீர்மானம் எடுக்கும் வகையில் அதிபர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை சிறப்பு அமைச்சரவை கூடுகின்றது.

இந்த கூட்டத்தில் அவன்கார்ட் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *