மேலும்

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து ‘காப்பாற்றப்படும்’ சிறிலங்கா கடற்படை அதிகாரி

????????????????????????????????தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட, சிறிலங்கா கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதது, சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009 நவம்பர் 10ஆம் நாள் நடந்த ரவிராஜ் படுகொலை தொடர்பாக, 6 சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்திரமே நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களில் ஹெற்றியாராச்சிகே சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சந்தன ஆகிய மூவரும் கடற்படையினராவர். அத்துடன், பெமியன் ஹுசேன் என்ற காவல்துறை அதிகாரி மீதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா குழு உறுப்பினர்களான பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகிய இருவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாகியுள்ள இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாத சந்தேக நபர்களுள், ரவிராஜ் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியும் ஒருவராவார்.

லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க  சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

அத்துடன் இவரே, வெள்ளைவான் கடத்தல்களின் சூத்திரதாரியாகச் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது  சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *