மேலும்

புலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா

gotabhaya-rajapakseவிடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது இரகசியமாக அமைக்கப்பட்ட பதுங்குக் குழியோ அல்லது மாளிகையோ கிடையாது. அப்போதிருந்த சூழலில் அதிபரின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொறுப்பு எமக்கிருந்தது.

அதன்படி பாதுகாப்பு சபையும், இராணுவ தளபதிகளும் எம்மிடம் முன் வைத்த பரிந்துரைகளுக்கு அமைவாகவே அதிபர் மாளிகையில் நிலத்துக்கு கீழ் ஒரு பாதுகாப்பான வதிவிடத்தை அமைத்தோம்.

இது ஒன்றும் இரகசியமாக அமைக்கப்பட்டது கிடையாது. அப்போதிருந்த சூழலை மையப்படுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்போது வேண்டுமானால் இந்த வதிவிடம் தேவையற்றதாக கருத முடியும். எனினும் அப்போது புலிகளுக்கு வான் வழியாக வந்து தாக்கும் திறன் இருந்த போதே இந்த நிலக் கீழ் வதிவிடம் தயார் செய்யப்பட்டது.

புலிகள் முதன் முதலாக வான்வழியாக கொழும்புக்கு வந்து குண்டு வீச்சை நடத்திய போது அவர்களது இலக்கு அதிபர் மாளிகையாகவே இருந்தது.

எனினும் இடையில் அவர்கள் அதனை மாற்றி களனி திஸ்ஸ  மின்சார நிலையத்தின் மீது குண்டு வீசிவிட்டுச் சென்றிருந்தனர்.

போர் இடம்பெற்றுக் கொண்டிருத்த காலப்பகுதியிலேயே அந்த நிலக் கீழ் வதிவிடம் அமைக்கப்பட்டது.

யாருடைய தனிப்பட்ட தேவைக்காகவும் அது அமைக்கப்படவில்லை. யாரேனும் அதிபராக பதவி வகிப்பவரின் பாதுகாப்புக்காகவே அமைக்கப்பட்டது.

அப்போது  அதிபர் ஒருவரை பாதுகாப்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த விடயமாக இருந்தது.  இந்த விடயத்தை இப்படி கலந்துரையாடுவது தவறானது.

புலிகளின் விமானம் வரும் போது அதிபரைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக எம்மால் ஓட முடியாது.

அதனாலேயே எமது பாதுகாப்புப் பிரிவுக்கு இப்படியான ஒரு நிலக் கீழ் வதிவிடம் தேவைப்பட்டது. அதனால் நாமே அந்த வதிவிடத்தை அமைத்தோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *