மேலும்

சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்

Brad-adamsசிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர்.  ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் நாட்டில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான தனது அழுத்தத்தை அமெரிக்கா கைவிட்டிருக்கும் என  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிறைவேற்று இயக்குனர் பிரட் அடம்ஸ், ‘சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தில் வேறுபட்ட சக்திகள் செயற்படுகின்றன. ‘அமெரிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் சிறிலங்கா மீதான ஐ.நா தீர்மானத்தை வரவேற்கவில்லை. இவ்வாறானதொரு தீர்மானத்தை இவர்கள் விரும்பவில்லை.

இவர்கள் இத்தீர்மானம் தொடர்பாக இந்தியா என்ன நினைக்கிறது, சீனா என்ன நினைக்கிறது, இதில் சீனாவின் பங்கு எத்தகையது என்பது தொடர்பாக மட்டுமே கவலை கொள்கின்றனர்’ என திரு.அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சிறிலங்கா தொடர்பான பிரச்சினையைத் தமது நாடு சார்பாக நோக்காது சீனாவின் கோட்பாடுகளின் ஊடாக நோக்குகின்ற சிலர் அமெரிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  இது சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவை பலவீனப்படுத்தாதா? அத்துடன் இது சிறிலங்காவுடனான சீனாவின் உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமையாதா?’ என அடம்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவில் எடுக்கப்படும் முயற்சிகள் நேரத்தை விரயமாக்குவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.  அமெரிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அதிகாரிகள் மட்டுமே சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

‘ சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பொப் பிளேக் பொறுப்பாக உள்ளார். அவர் சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் தூதுவராக முன்னர் பதவி வகித்திருந்தார். ராஜபக்ச அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை இவர் விரும்பினார்’ என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான நிறைவேற்று இயக்குனர் அடம்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் மட்டுமல்லாது மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்பதை பிளேக் உணர்ந்து கொண்டார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பணியைத் திறம்பட ஆற்றியிருந்தால், அமெரிக்காவும் நீதி தொடர்பில் தான் வழங்கிய அழுத்தத்தைக் கைவிட்டு, மீளிணக்கப்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் எனத் தான் கருதுவதாக அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ உண்மையில் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட்டிருந்தால், சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டை முன்னேற்றுகிறது. சமூகங்களின் மத்தியில் உறவுநிலையைக் கட்டியெழுப்புவதற்காகப் பணியாற்றுகிறது. தமிழ் சமூகங்களுக்காக தனது முதலீட்டை மேற்கொள்கிறது. தமிழர் வாழிடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறது. தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கேற்ப அரசியல் நிறுவகங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுவுகிறது என அமெரிக்கா கூறியிருக்கும்’ என அடம்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்கட்டும் என பொப் பிளேக்கும் அமெரிக்க அரசாங்கமும் கருதியிருக்கலாம். ஆனாலும் சிறிலங்கா மீதான அமெரிக்கக் கோட்பாடு தொடர்பில் மாற்றம் செய்ய வேண்டும் என பிளேக் உணர்ந்து கொண்டார். இதுவே இவர் மீண்டும் தனது நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான வினாவை முன்வைக்க உதவியது.

இவர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி உயர்த்தப்பட்ட போது கோட்பாட்டு மட்டத்தில் ஏதாவது காத்திரமான மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக இவர் கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டார். ஆகவே இவை அனைத்தும் மிகவும் சிக்கலானவையாகும்’ என அடம்ஸ் தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தான் தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் இழைப்பது நல்லதல்ல எனவும் பிளேக் உணர்ந்து கொண்டார். ஆனால் அவர்கள் பிளேக்கிற்குத் துரோகம் இழைத்து விட்டார்கள் என நான் நினைக்கிறேன் எனவும் அடம்ஸ் தெரிவித்தார்.

சிறிலங்காவின் இறுதியுத்தம் தொடர்பான பேச்சுக்களில் ‘வெள்ளைக் கொடி விவகாரம்’ உண்மையில் இடம்பெறவில்லை என்ற விடயம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் புலிகளின் தலைமையை முற்றாக அழித்ததன் மூலம் தாம் நாட்டிற்கு நல்லது செய்துவிட்டதாகவும், இதன்மூலம் தம்மால் இழைக்கப்பட்ட பல்வேறு மிகப்பயங்கரமான மீறல்களை முன்னைய அரசாங்கம் மூடிவிட முனைந்ததாகவும் அடம்ஸ் குறிப்பிட்டார்.

‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதேபோன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான விசாரணைகள் மூலமே உண்மையில் போரின் இறுதியில் என்ன நடந்தது என்பதை அறியமுடியும்’ எனவும் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது இடம்பெற்ற முக்கிய சில சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் முழு நாட்டையும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அதேபோன்று முழு இராணுவ வீரர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதென்பது சுலபமானதல்ல. இதற்குப் பதிலாக மிக முக்கிய வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைமையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எமது கண்காணிப்பகத்திற்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் புலிகளிடமிருந்தும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. நாங்கள் 2008ன் பிற்பகுதியில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக விமர்சிக்கத் தொடங்கினோம். அப்போது நாங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தோம்.

நாங்கள் புலிகளுக்கு எதிராக எமது விமர்சனங்களை முன்வைத்ததன் காரணமாக ராஜபக்சவின் அரசாங்கமானது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தையும் ஏனைய அமைப்புக்களையும் வரவேற்றது’ என அடம்ஸ் தெரிவித்தார்.

‘நாங்கள் புலிகளை விமர்சித்த போது சிறிலங்காவின் தூதுவர்களும், அமைச்சர்களும் எம்மை வரவேற்றனர். சிறிலங்காவின் அமைச்சரான மகிந்த சமரசிங்க என்னிடம் கலந்துரையாடிய போது  நீங்கள் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என புகழ்ந்தார். அதற்காக என்னிடம் நன்றி தெரிவித்தார்.

ஆனால் அதே கோட்பாட்டை நாங்கள் தற்போது சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்குப் பயன்படுத்தும் போது அதனை அவர்கள் விரும்பவில்லை’ எனவும் அடம்ஸ் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவின் மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தை நாங்கள் நோக்கும் போது இது உண்மையில் மிகப் பயங்கரமான ஒரு அரசியலாகக் காணப்படுகிறது. ஆகவே நாங்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை, இதனை அரசியலாக்குவதே சிறிலங்கா தான் என திரு அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆனால் இது நாட்டைப் பிளவுபடுத்துகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தப் போர் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பாக சில கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. இந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ராஜபக்ச அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தாங்கள் ‘பூச்சிய பொதுமக்கள் இழப்புக் கோட்பாட்டைப்’ பின்பற்றியதாக பல ஆண்டுகளாக ராஜபக்ச அரசாங்கம் கூறிவந்துள்ளது. இது மிகவும் முட்டாள்தனமான ஒரு பதிலாகும். உண்மையில் இவர்கள் ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், யுத்தத்தின் போது பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டன என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்’ எனவும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குனர் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘புலிகளின் தலைமையானது போர் மிகவும் மோசமடைந்திருந்த காலத்தில் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தது. இவர்கள் செயற்பாடுகளால் இவர்களது அரசியற் கோரிக்கைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் தமது கருத்துக்களை மட்டும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மூளைச்சலவையில் ஈடுபட்டனர்’ எனவும் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரது பிரச்சினைகளையும் முன்வைப்பதற்கான பொருத்தமான பொறிமுறை சிறிலங்காவில் இன்னமும் உருவாக்கப்படவில்லை என அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தமது நாடுகளில் இடம்பெற்ற தவறுகளைப் பொறுப்பெடுத்து, அதற்காக நட்டஈடுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாடுகளை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன.

இவற்றை எடுத்துக்காட்டாக கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ‘வெற்றியாளர்களுக்கான நீதி’ மட்டுமே வழங்கப்பட்டது. போர் முடிவடைந்ததன் பின்னர் இந்த நிலை மிகவும் மோசமடைந்தது. போரை வென்றெடுத்த தரப்பினர் மட்டுமே நாட்டில் போற்றிப் புகழப்பட்டனர்.

‘நீதி நடவடிக்கையானது பல்வேறு கதைகளை வெளிக்கொணர்வதற்கான வழியை உருவாக்கும். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான தேவையைப் புரிந்துகொண்டுள்ளது போல் தெரிகிறது. ஆகவே இது வெற்றியாளரிற்கான நீதி மட்டுமல்ல. இது அனைத்து சமூகங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியாகும்’ என அடம்ஸ் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்- சண்டே ரைம்ஸ்

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *