மேலும்

கலப்பு நீதிமன்றத்தால் களேபரமானது சிறிலங்கா நாடாளுமன்றம்

parliamentசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதாதைகளைத் தாங்கியவாறு, எதிர்க்கட்சி உறுப்பினர்களான உதய கம்மன்பில, வீரகுமார திசநாயக்க, ஜெயந்த சமரவீர, நிரோசன் பிரேமரத்ன ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்மொழியப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து விவாதிக்க ஒரு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் அரசதரப்பு அதற்கு இணங்கவில்லை எனறும் குறிப்பிட்டார்.

parliament-banner

இதுகுறித்து விவாதம் நடத்த தயார் என்று கூறிய அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஆனால், கலப்பு நீதிமன்றத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமோ அல்லது ஐ.நாவின் அண்மைய அறிக்கையோ முன்மொழியவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் கலப்பு நீதிமன்றமே முன்மொழியப்பட்டுள்ளதாக வாதிட, இருதரப்புக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிடம், அவையிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடுவது போன்று, ஐ.நா முன்மொழிந்துள்ளது கலப்பு நீதிமன்றத்தையா என்று  கேள்வி எழுப்பினார் லக்ஸ்மன் கிரியெல்ல.

ஆனால் அதற்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அவையில் இருந்து பதாதைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

எனினும் போராட்டம் தொடர்ந்ததால், சபையை 10 நிமிடங்களுக்கு அவர் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *