மேலும்

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

mavai-senathirajahவடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

பொன்னாலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் அபிலாசைகள், நிறைவேற்றப்பட்டு, அவர்கள் தமது சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து கௌரவமாக வாழவேண்டும்.

அதன் அடிப்படையிலேயே எமது தேர்தல் அறிக்கையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள், இணைந்த வடக்குகிழக்கில், சுயநிர்ணய அடிப்படையில், சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அனைத்துலக நாடுகளில் பல்வேறுபட்ட சமஸ்டி கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சமஸ்டி என்பது தனிநாட்டுக்கான கோரிக்கையல்ல. இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர அமைதி தொடர்வதையே நாம் விரும்புகின்றோம்.

நாம் முன்வைத்துள்ள கோரிக்கையை புறந்தள்ளும் வகையில், தென்னிலங்கை சிங்களக் கடும்போக்குச் சக்திகள் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றன.

எம்மைப் பொறுத்தவரையில் 13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தராது என்பதை சிறிலங்கா அரசாங்கத்திடமும் அனைத்துலகத்திடமும் வெளிப்படுத்தியுள்ளோம்.

எதுஎவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரதீர்வை சமஸ்டி அடிப்படையிலேயே எட்ட முடியும்.

சமஸ்டி அடிப்படையில் தீர்வொன்று கிடைக்கப் பெறாது விட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஐக்கியமாக வாழ்வதென்பது கேள்விக்குறியாகிவிடும்.

தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதை ஏற்கமுடியாது.

தமிழ் மக்கள் தமது பலத்தை வெளிப்படுத்தி ஓர் அணியில் திரளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *