மேலும்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் ராஜபக்சவினரைக் காப்பாற்ற முடியாது – ராஜித சேனாரத்ன

rajitha-senarathnaபோர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவினரை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றாலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா அறிக்கை வந்ததும் நாம் அனைத்துலக தரத்துக்கு உட்பட்டு உள்ளக விசாரணையை ஆரம்பிப்போம்.

ஆனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட எந்தவொரு ராஜபக்சவினரையும் அனைத்துலகத்திடம் ஒப்படைக்கமாட்டோம்.

அனைத்துலக தரத்துடன் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய உள்ளக விசாரணைகளை முன்னெடுப்போம். அதனைத்தான் ஐ.நாவும் எதிர்பார்க்கிறது.

எக்காரணம் கொண்டும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைக்கோ வெளிநாடுகளின் தலையீடுகளுக்கோ ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

ஆனால் வெள்ளைக்கொடிகளுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தாலோ அல்லது பணத்துக்கு கொலை செய்திருந்தாலோ அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

அதுதொடர்பாக உள்ளக விசாரணையை நடத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

மேலும் மகிந்த ராஜபக்ச தான் இந்த விடயத்தை அனைத்துலக மயமாக்கினார். அவர்தான் தருஸ்மன் குழுவுக்கு இணங்கினார்.

உள்ளக விசாரணையை நடத்தியிருந்தால் எந்த சிக்கலும் வந்திருக்காது.  மகிந்தவே பிரச்சினைகளை குழப்பியுள்ளார். அவர்தான் அனைத்துலக குழுவை இங்கு வரவழைத்தார்.

எமது அரசாங்கம் திட்டமிட்டு அனைத்தையும் செய்து வருகின்றது. அந்தவகையில் ஐ.நா அறிக்கை அடுத்த மாதம் வந்ததும் செப்ரெம்பர் மாதமளவில் விசாரணையை ஆரம்பிப்போம்.

போர்க்குற்றங்கள் செய்திருந்தால் உள்ளக விசாரணை நடத்தி அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *