மேலும்

மைத்திரி அணியினரை தோற்கடிக்க நரிகளாக மாறி ஊளையிடும் மகிந்த அணியினர்

UPFA-meetingஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்க, அவர்களின் பரப்புரையை ஊளையிட்டுக் குழப்பும் புதிய உத்தியை மகிந்த ராஜபக்ச அணியினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.

மொனராகல பிரதேசசபை மைதானத்தில் நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டத்தில், அமைச்சர் ஜெகத் புஸ்பகுமார மற்றும், விஜித் விஜதமுனி சொய்சா ஆகியோர் உரையாற்றிய போது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிலர் ஊளையிட்டு குழப்பம் விளைவித்தனர்.

அமைச்சர் ஜெகத் புஸ்பகுமார உரையாற்றத் தொடங்கியதும், கூட்டத்தில் முன்பாக இருந்தவர்கள் சிலர் ஊளையிடத் தொடங்கினர்.

ஒரு குழுவினர் ஊளையிட்டு குழப்பம் விளைவிக்க வந்துள்ளனர் என்பது குறித்து ஏற்கனவே தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜெகத் புஸ்பகுமார, ஆனாலும் இதன் மூலம் தன்னை தடுத்து விடமுடியாது என்றும் குறிப்பிட்டு தனது பேச்சை முடித்தார்.

அதையடுத்து அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா உரையாற்றத் தொடங்கிய போதும், இவ்வாறே ஊளையிட்டு குழப்பம் விளைவிக்கப்பட்டது.

ஏற்கனவே நாவுலவில், மகிந்த ராஜபக்ச பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க உரையாற்றிய போதும், இதுபோன்றே ஊளையிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், களுத்துறையில் வரும் 3ஆம் நாள் நடக்கவுள்ள கூட்டத்தில், மேடையேறினால், ஊளையிடுவோம் என்று தனக்கு இரண்டு அமைப்பாளர்களிடம் இருந்து கடிதமூலம் எச்சரிக்கை வந்தள்ளதாகவும் அதனால் தாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களை வெற்றிபெற விடாமல் தடுப்பதன் மூலம் கட்சிக்குள் தமது பலத்தை அதிகரிக்க மகிந்த ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளது.

இதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான வேட்பாளர்களின் பரப்புரையை குழப்பும் வகையில் ஊளையிடும் திட்டத்தை மகிந்த அணியினர் செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *