மேலும்

வடக்கில் இராணுவம் சாரா செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விட்டதாம் சிறிலங்கா இராணுவம்

sri-lanka-armyவடக்கில் கண்ணிவெடிகளை அகற்றல், மீள்குடியமர்வு தொடர்பான கட்டுமானம், மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்றவற்றுக்கு மட்டும், தமது பணிகளை மட்டுப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் அனுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே சிறிலங்கா இராணுவம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவைத் தளமாக கொண்ட ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,  சிறிலங்கா இராணுவம், இராணுவம் சாரா செயற்பாடுகளை (non-military activities) விரிவாக்கியுள்ளதாகவும், பெரியளவிலான அபிவிருத்தி,  கட்டுமானத் திட்டங்களிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகவும், குற்றம்சாட்டப்படிருந்தது.

இந்தநிலையிலேயே தி ஹிந்துவுக்கு அளித்துள்ள பதிலில், சிறிலங்கா இராணுவம், பெரும்பாலும் இராணுவம் சாரா செயற்பாடுகளில் இருந்து முற்றிலுமாக விலகி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், அச்சுறுத்தல் மதிப்பீடு, தேசிய பாதுகாப்புக் கரிசனைகள், மூலோபாய தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, படைகள் நிறுத்தப்பட்டு வந்துள்ளன.

அதன்படி  படையினர் பல சந்தர்ப்பங்களில் மீள நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

தேசிய பாதுகாப்புக் கரிசனையின் அடிப்படையிலேயே படையினர் மற்றும் முகாம்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது,

அதேவேளை, 75 வீதமான தமது டிவிசன்கள் வடக்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், எனினும், சரியான எண்ணிக்கை விபரத்தை வழங்க மறுத்து விட்டது.

படையினர் தொடர்பான சரியான எண்ணிக்கையை உலகில் எந்தவொரு இராணுவமும் வெளியிடுவதில்லை.

இராணுவப் படைப்பிரிவுகளின் அடையாள இலக்கங்கள், கடற்படை மற்றும் வான்படைக் கலன்கள் பற்றிய விபரங்களைக் கூட பல நாடுகள் வெளியிடுவதில்லை என்றும் சிறிலங்கா இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

படைகளை மீள நிலைப்படுதுதல், தனியார் காணிகளை விடுவித்தல், செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பலாலியில், 6,258 ஏக்கர் நிலம் உள்ளிட்ட, வடக்கில், 19,159 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரால் காங்கேசன்துறையில் நடத்தப்படும் தல்செவன விடுதி, ஓய்வுக்காக பயன்படுத்தப்படுவது என்றும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களுக்கும் அங்கு அனுமதிக்கப்படுவதாகவும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள விடுதி மாநாட்டு மண்டபமாக பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபைக்கு அனுமதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக அரசாங்கத்துக்குள் இருவேறு கருத்துக்கள் உள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *