மேலும்

சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்கே சொந்தம் – சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Supreme Courtசம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த  பொதுமக்களின் 818 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கேகே வழங்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதுடன், சிறிலங்கா முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சம்பூர் பகுதியில் பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தக் காணிகளில், 818 ஏக்கரை உரியவர்களிடம் ஒப்படைப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.

ஆனால், சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணியில் தமக்கு சொந்தமான 237 ஏக்கர் காணியும் உள்ளதாக தெரிவித்து கேட்வே இன்டஸ்றீஸ் நிறுவனத்தால் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் கே.சிறிபவன் தலைமையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கில் கேட்வே இன்டஸ்றீஸ் நிறுவனம் காணிகளை உரிமை கோரமுடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை விடுவிப்பதாக சிறிலங்கா அதிபரால் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதை யாரும் உரிமை கோர முடியாது எனவும் பொதுமக்களுக்கே இந்த நிலங்களை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் கேட்வே இன்டஸ்றீஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த காணிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *