மேலும்

ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்

mahindaசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும்.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளார். சிறிசேன அதிபராக வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சிக்கான புதியதொரு வழி திறக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த ஜனநாயகம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஆதரவுகள் சிலரால் வழங்கப்படுகின்ற நிலையில் இது சிறிலங்காவின் அரசியல் மறுமலர்ச்சி மற்றும் இன மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு பெரும் அழுத்தமாகவே அமையும்.

ராஜபக்சவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன கடந்த நவம்பர் 2014ல் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இவருக்கு ஐ.தே.க வின் தலைமையில் ஒன்றுகூடிய சில அரசியற் கட்சிகள் தமது ஆதரவை வழங்கின.

கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டில் ஊழலைத் தடுப்பேன் எனவும், சட்ட ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துவேன் எனவும் சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.

mahinda

இவர் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குப் பலத்துடனும் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடனும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், ராஜபக்சவால் கைக்கொள்ளப்பட்ட சிங்கள தேசியவாதக் கொள்கையிலிருந்து விலகி நாட்டை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் சென்றார். சிறுபான்மை மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான சில முக்கிய நகர்வுகளை சிறிசேன முன்னெடுத்துள்ளார்.

நாட்டைப் பல கூறாக்கிய அரசியல், இன மற்றும் மத ரீதியான வடுக்கள் இன்னமும் ஆற்றப்படவில்லை. நிறைவேற்றப்படாத பல்வேறு வாக்குறுதிகள் நீண்டு செல்கின்றன. போரின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு அரசாங்கம் இன்னமும் பொறுப்பளிக்கவில்லை.

இதேபோன்று இனங்களுக்கிடையில் சமாதானம் எட்டப்பட வேண்டும். இராணுவ மயமாக்கலை ஒழித்தலுக்கான முழுமையான திட்டம் தீட்டப்பட வேண்டும். நாட்டில் நிலவும் மிகப் பாரிய மோசடிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறிலங்காவின் அரசியல் மயப்படுத்தப்பட்ட நீதி மற்றும் காவற்துறை முறைமை நீக்கப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டும்.

ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக வெற்றி பெறுவதற்கான போதியளவு ஆசனங்களைப் பெறாவிட்டாலும் கூட, இவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றால் கூட இவரது தலைமையில் கூடும் உறுப்பினர்களால் நாடாளுமன்றில் பல்வேறு குழப்பங்கள் விளைவிக்கப்படும்.

கடந்த முதலாம் திகதி ராஜபக்ச தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த போது, தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு நாட்டுப்பற்றுள்ள கட்சிகள் இணைய வேண்டும் எனக் கோரியிருந்தார். ஐ.தே.க தலைமையிலான சிறிசேனவின் அரசாங்கத்தை ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

அதாவது சிறிசேன அரசாங்கமானது தேசிய பாதுகாப்பைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்வதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து சிங்கள பெரும்பான்மை சமூகத்தினர் வாழும் இடங்களில் ராஜபக்சவுக்கு ஆதரவான பல்வேறு ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஊர்வலங்களில் ராஜபக்சவை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமிய சிங்களவர்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு மிகப்பலமான ஆதரவு உண்டு.

ஜனவரியில் சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், ராஜபக்சவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சிறிசேன எடுத்துக் கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் மகிந்தவின் தலைமையில் செயற்படுகின்றனர்.

ஆனால் சிறிசேனவால் முழு அளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையோ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை.

ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெறுவதைத் தடுப்பதற்கு ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசாரார் கருதுகின்றனர். இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் பொதுவான ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு சிறிசேன மிகவும் பிரயத்தனப்படுகிறார்.

ராஜபக்ச தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் என கடந்த மூன்றாம் திகதி அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட போது சிறிசேனவின் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.  இதன் பின்னர், சிறிசேனவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.ம.சு.கூட்டணியிலிருந்து விலகி தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது தொடர்பான இறுதிப் பட்டியல் இன்னமும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட வேண்டும். ஆகவே ஜனவரித் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து பலமானதொரு கூட்டணி உருவாக்கப்பட்டது போன்று தற்போதைய தேர்தலில் அவ்வாறானதொரு கூட்டணி உருவாக்குவதென்பது மிகவும் கடினமானதாகும்.

சிங்களத் தேசியவாதிக் கருத்துக்கள் சிறிசேனவின் கடந்த ஆறு மாத கால ஆட்சியில் கணிசமானளவு குறைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இறுதியாக கடந்த 26ம் திகதி கலைக்கப்பட்ட போது, ஐ.ம.சு.கூட்டணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறிசேனவின் பல்வேறு முயற்சிகளைத் தடுந்திருந்தனர்.

நிறைவேற்று அதிபருக்குள்ள அதிகாரங்களைக் குறைப்பதற்காக சிறிசேனவால் எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் அரசியல் யாப்பில் சீர்திருத்தப்பட்டுள்ளது.

சிறிசேன தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான தனது நல்லெண்ண சமிக்கையாக இராணுவத்திடமிருந்த ஒரு பகுதி நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அரசியல் கைதிகளை சிறையிலிருந்து விடுவித்தல் மற்றும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் விசாரணை செய்தல் போன்றன சிறிசேனவால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனாலும் இவை முழு அளவில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் சிங்கள தேசியவாதக் கருத்துக்களாலும் ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான இடத்தை வழங்குதல் போன்ற சிறிசேனவின் நல்லெண்ண முயற்சிகளுக்குத் தடையாக அமையும் என்கின்ற அச்சம் நிலவுகிறது.

சிங்கள வாக்காளர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவ வீரர்களைச் சமாதானம் செய்வதற்காக சிறிசேனவும் அவரது ஐ.தே.க கூட்டாளிகளும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்ளுர் விசாரணைப் பொறிமுறை உருவாக்கத்திற்கான திட்டத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் உள்ளுர் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதாக வாக்காளர்களிடமும் ஐ.நாவிடமும் சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

சிறிசேன புதிதாக ஆட்சி அமைத்துக் கொண்டதால் பெப்ரவரியில் ஐ.நா மனித உரிமைகள் சபையிடம் கையளிக்கப்பட வேண்டிய அறிக்கையை செப்ரெம்பரில் கையளிக்குமாறு கூறப்பட்டது. ஆனால் ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும் ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறிமுறையை முற்றிலும் நிராகரித்தனர். இதுவே நடைபெறவுள்ள தேர்தலின் மிக முக்கிய பரப்புரை விடயமாகும்.

நாட்டில் தேர்தல் பரப்புரைகள் இடம்பெறவுள்ள நிலையில் இம்முறை அதிகளவில் வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஐ.தே.க இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்ற போதிலும், ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் ஐ.தே.கவின் ஆசனங்கள் பறிபோகலாம் என்கின்ற அச்சம் நிலவுகிறது.

எனினும் இத்தகவல் இன்னமும் முடிவாகவில்லை. இது தொடர்பில் சிறிசேன எத்தகைய தீர்வைக் கொண்டுள்ளார் என்பது தெளிவற்றதாகவே உள்ளது.

சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆறு மாதங்களில் போருக்குப் பின்னான சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வதென்பதை நிரூபித்துள்ளார். ஜனவரியில் இடம்பெற்ற ஜனநாயக மறுமலர்ச்சியானது அனைத்துத் தரப்பினர்கள் மத்தியிலும் குறிப்பாக அனைத்துலக சமூகத்தின் மத்தியில் நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது.

ஆகவே சிறிலங்காவில் மேலும் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பவல்ல தேர்தல் கோட்பாடுகளை சிறிசேன முன்வைக்க வேண்டும். இதற்காக இவர் தனது முழுமையான ஈடுபாட்டைக் காண்பிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்வாய்ப்பையும் சிறிசேன தனது கோட்பாட்டில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

ஆங்கில மூலம் – அலன் கீனன்*
வழிமூலம்          – lowyinterpreter.org
மொழியாக்கம்   – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *