மேலும்

வெளிநாடுகளுக்கு சீனா வழங்கும் கடன்களின் பின்னணி

புராதன ‘பட்டுப்பாதை’யை  தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சீனா ‘ஒரு அணை மற்றும் ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புராதன ‘பட்டுப்பாதை’ திட்டத்தின்  கீழ் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளில் சீனா பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் ‘ஒரு பாதை ஒரு அணை’ என்கின்ற திட்ட மூலோபாயம் 2013ன் பிற்பகுதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.

இத்திட்ட அமுலாக்கல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சீன அரசாங்கத்தின் பிரதான நிதி வழங்குனர்களான சீன அபிவிருத்தி வங்கி மற்றும் சீனா எக்சிம் வங்கி ஆகியன தனது ஒரு அணை ஒரு பாதை என்கின்ற திட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளில் 67 சதவீதக் கடன்களை வழங்கியுள்ளதாக லண்டனிலுள்ள முதலீட்டு வங்கியான Grison’s Peak ஆல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் இத்திட்ட மூலோபாயத்திற்குள் உள்ளடங்காத இலத்தீன் அமெரிக்கா மற்றும் மேற்கு, மத்திய ஆபிரிக்கா போன்றன இந்த ஆய்விற்குள் உட்படுத்தப்படவில்லை.

சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்ட மூலோபாயமானது சீன அதிபரின் முக்கிய கோட்பாட்டுத் திட்டமாகக் காணப்படுகிறது. இத்திட்டம் முதன் முதலாக கம்யூனிசக் கட்சியால் 2013 இன் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

சீனாவுக்கும் 65 உலக நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை அதிகரிப்பதுடன் வர்த்தக சார் தொடர்புகளையும் நெருக்கமாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்காகும்.

4.4 பில்லியன் மக்களை மையப்படுத்தித் தற்போது மேற்கொள்ளப்படும் இத்திட்டமானது சீனாவின் கூட்டாளி நாடுகளின் உட்கட்டுமான மற்றும் நிதி, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது.

சீனாவின் திட்ட நோக்கங்கள் தொடர்பாக Grison’s Peak ஆல் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வீதி, தொடருந்து, மின்சக்தித் திட்டங்கள் உட்பட பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்காக சீனா கடன் வழங்கி வருகிறது. இக்கடனுதவியானது 52 சதவீதம் தொடக்கம் 67 சதவீதம் வரை காணப்படுகிறது.

இதேவேளை வர்த்தக நிதி சார் மேம்பாட்டிற்காக 30 சதவீத முதலீடு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவால் தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 67 சதவீத கடனானது 49.4 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

தனது திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நாடுகளுடன் சீனா கொண்டுள்ள மூலோபாய சார் உறவானது சீனாவின் வர்த்தக மற்றும் மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும் என ‘நியூ அமெரிக்கன் நிறுவனத்தில்’ பணியாற்றும் மூத்த ஆய்வாளரான கலாநிதி பராக் கான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

‘உட்கட்டுமான முதலீடு என்பது நாடுகளின் பூகோள அரசியல் சார் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு தொடர்பாடல் கருவியாகும்’ என்கிறார் கலாநிதி கான்ன. உட்கட்டுமானத் திட்டங்கள் குறிப்பாக தொடருந்துப் பாதைகளை அமைத்தலானது இன்னமும் சில நூறு ஆண்டுகளுக்கு சீனா தனது செல்வாக்கை நிலைப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.

ஆனால் இவ்வளவு பெரிய அளவில் இதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என கலாநிதி கான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீனா தற்போது புதிய மாபெரும் போட்டி ஒன்றில் வெற்றி கொள்கிறது. அதாவது புதிய பட்டுப்பாதைகளை அமைப்பதன் மூலம் சீனா இந்த வெற்றியைப் பெறுகிறது’ என கான்னா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று 19ம் நூற்றாண்டில் தமது செல்வாக்கை மத்திய ஆசியாவில் நிலைநிறுத்துவதற்காக ரஸ்யா மற்றும் பிரிட்டனுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீனாவின் பட்டுப்பாதை பொருளாதார அணை என்பது புதிதல்ல. இத்திட்டம் மறைமுகமாக 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்காக சீனா சொல்லும் காரணம் எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

அதாவது பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்தை சுமூகப்படுத்துவதற்காக இத்திட்டத்தை அமுல்படுத்துவதாக சீனா கூறிவருகிறது’ என கலாநிதி கான்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னான பத்தாண்டுகளில் மேற்குலக சக்திகளாலும் யப்பானால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உதவித் திட்டங்கள் போன்று தற்போது சீனாவானது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் கீழ் தனது வங்கிக் கடன் கோட்பாட்டை விரிவாக்கியுள்ளது. இத்திட்ட அமுலாக்கலில் சீன நிறுவனங்கள் இயந்திர வழங்குனர்களாகவும் பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழங்குனர்களாகவும் செயற்படுகின்றன.

சீனாவைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஒன்று 70 சதவீத கடன்களை வழங்குவதாகவும் Grison’s Peak தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிறுவனம் முதலில் வர்த்தக நிதிசார் திட்டங்களுக்காக கடன்களை வழங்கி வந்துள்ளது.

இருப்பினும் தற்போது உட்கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளும் சீனாவின் முதன்மையான சீன நிறுவனமாக இது காணப்படுகிறது.

இறுதியாக, சீன அரசின் சலுகை ரீதியான கடன் வழங்கலானது இனிவருங்காலங்களில் குறைந்து செல்லலாம். சீனாவால் தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்திற்காக வழங்கப்படும் கடனிற்கான வட்டியானது வெளியில் கூறப்படாவிட்டாலும் கூட, முன்னர் இக்கடன் வட்டி 2-2.5 சதவீதமாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போது இவ்வட்டி வீதமானது 4-4.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் முதலீட்டு வங்கியான Grison’s Peak   சுட்டிக்காட்டியுள்ளது.

வழிமூலம்- THE FINANCIAL TIMES
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *