மேலும்

சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர

சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது.

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, தாய்த்தளமான, ஹவாயில் உள்ள சான் டியாகோ நோக்கிச் சென்ற போதே, சிறிலங்கா, குழுவினர், அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்காவில் இருந்து சுமார் 225 கடல் மைல் தொலைவில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் தரித்து நின்ற போதே, கடந்த 19ம் நாள் சிறிலங்கா குழுவினர் விமானம் மூலம் அங்கு சென்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சி-2 போக்குவரத்து, மீட்பு விமானம் மூலம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா மற்றும் கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழு, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு, விமானம் தாங்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் தோமஸ் கார்ல் ஓ தோமஸ், மற்றும், விமானம் தாங்கிக் கப்பலில் தாக்குதல் பிரிவின் தளபதியான  ரியர் அட்மிரல் கிறிஸ்ரோபர் கிரடி ஆகியோர் சிறிலங்கா குழுவினரை வரவேற்றனர்.

IF

IF

IF

IF

IF

IF
அங்கு இருதரப்பு நலன்கள் குறித்த விடயங்கள் குறித்து சிறிலங்கா அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அதையடுத்து, அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலில் உள்ள, போர் விமானங்கள், போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு தமது திறனை வெளிப்படுத்தியதுடன், நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்கு வானூர்திகளும், மீட்பு விமானங்களும், ஒத்திகையில் ஈடுபட்டு தமது திறனை வெளிப்படுத்தின.

அதனைப் பார்வையிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “இது ஒரு ஆச்சரியம். விமானங்களின் தொகுதியை முதல்முறையாக காணும் வாய்ப்புக் கிடைத்தது அசாதாரணமானது.  இதற்குடி முன்னர் நாம் திரைப்படங்களில் தான் இதனைப் பார்த்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில்  நடவடிக்கைகளை புரிந்து கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற்படைப் பிரிவினால், இந்தப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது.

சிறிலங்கா குழுவினர், விமானங்களில் செயற்பாடுகளைப் பார்வையிடவும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு மாலுமிகளுடன் கலந்துரையாடவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *