மேலும்

அமெரிக்காவில் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தும் சிறிலங்கா நிதி அமைச்சர்

Nisha_Biswal_meets_Ravi_Karunanayake

ரவி கருணாநாயக்க- நிஷா பிஸ்வால் – கோப்புப்படம்.

அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில், உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் ரவி கருணாநாயக்க மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அதேவேளை, நேற்றுமுன்தினம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொருளாதார அபிவிருத்தி, சக்தி மற்றும் சுற்றாடல் துறைக்கான அடிநிலைச் செயலர் கதரின் நொவலியையும், மூடிய அறைக்குள், சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் சிறிலங்கா நிதி அமைச்சர்.

எனினும், இந்தப் பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இருதரப்பு பொருளாதார உறவுகளையும், அமெரிக்க முதலீடுகளையும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே சிறிலங்கா நிதி அமைச்சர் வொசிங்டனில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர், நேற்றுக்காலை அமெரிக்க வர்த்தக மன்றத்திலும் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

IMF Mitsu-hiro Furu-sawa with ravi

அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சு-ஹிரோ புரு-சாவாவுடன் ரவி கருணாநாயக்க

அத்துடன் வொசிங்டனில் நடைபெறும், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்திலும், சிறிலங்கா நிதி அமைச்சர் பங்கேற்று வருகிறார்.

இதன்போது, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சு-ஹிரோ புரு-சாவாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அவர், சீனாவிடம் பெற்றிருந்த கடன்களை அடைப்பதற்கு, அனைத்துலக நாணய நிதியம், மற்றும் உலக வங்கியிடம், மேலதிக கடனுதவியைக் கோரியிருந்தார்.

எனினும் சிறிலங்காவின் நிதிநிலைமை பாரதூரமாக இல்லை என்று  மேலதிகமான கடனுதவியை வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுத்திருந்தது.

அதையடுத்து, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னைய ஆட்சியில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டிவீதங்களை மீளாய்வு செய்யக் கோரியிருந்தார். எனினும், சீனா அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.

அதேவேளை, திறைசேரி உண்டியல்கள் மூலம், கடன்பெறும் தொகையை, 400 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கக் கோரும் நிதிச் சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறிலங்காவின் நிதி நிலைமை மோசமடைந்துள்ள நிலையிலேயே மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தி வருகிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்.

இந்தப் பயணத்தின் மூலம், அனைத்துலக நிதிமுகவர் அமைப்புகளிடம் மேலதிக கடன்களை பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *