மேலும்

இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்- உள்நாட்டு நெருக்கடியே காரணம்?

maithripala-sirisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

60வது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாடு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும், பன்டுங் நகரிலும் நாளை 19ம் நாள் தொடக்கம், 24ம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்பார் என்றும், அவர், இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்தானேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், நேற்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில், ஆசிய-ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 27 நாடுகளின் தலைவர்கள், 9 நாடுகளின் துணை அதிபர்கள், 3 நாடுகளின் பிரதிப் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஏனைய நாடுகளின் சார்பில், அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலேயே சிறிலங்கா இடம்பெற்றுள்ளது. எனினும், சிறிலங்காவின் சார்பில் எந்த அமைச்சர் பங்கெடுக்கவுள்ளார் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஆசிய-ஆபிரிக்காவைச் சேர்ந்த 109 நாடுகளின் தலைவர்களுக்கும், வெளியிலுள்ள 17 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கும் இந்தோனேசியா அழைப்பு அனுப்பியிருந்தது.

சிறிலங்காவில் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவுக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 19வது அரசிலமைப்புத் திருத்தம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக வாக்குறுதியளித்த ஏப்ரல் 23ம் நாளும் நெருங்கியுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் தலைமை தாங்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலையும் தோன்றியிருக்கிறது.

உள்நாட்டில் சிறிலங்கா அதிபர் எதிர்கொள்ளும் பலமுனை அழுத்தங்களினால் தான், ஆசிய-ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *