மேலும்

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர்

Mahinda-Samarasinghe13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியில் நேற்று நடந்த அரசியல் விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், அரசியலமைப்பில் பலவந்தமாக திணிக்கப்பட்ட, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது.

இந்தியா தனது தீர்வை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு, அப்போதைய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சிறிலங்காவின் வான்வெளியில் இந்தியா அத்துமீறியிருந்தது.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு, முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிவதை எந்தவொரு சிறிலங்கா தலைவரும் விரும்பவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு நியாயமற்றதாக- ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

2009ம் ஆண்டு மே மாதம் ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தொடரில், இந்தியா எமக்கு ஒத்துழைப்பதில்லை என்று தீர்மானித்திருந்தது.

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது.

அப்போது நாடு மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள நேரிட்டது.

ஜெனிவாவில் இரண்டு முறை மேற்குநாட்டு சக்திகளுடன் இணைந்து சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

கடந்தமுறை பொறுப்புக்கூறும் வெளிநாட்டு விசாரணை தொடர்பான முக்கியமான வாக்கெடுப்பின் போது, இந்தியா பங்கெடுக்காமல் இருந்தது.

இந்தியா அவ்வாறு ஒதுங்கி நின்றதற்கும், முன்னர் தீர்மானங்களுக்கு ஆதரவளித்ததற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை.

சிறிலங்கா தொடர்பான அறிக்கையை வரும் செப்ரெம்பர் வரை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்திவைக்காமல் இருந்திருந்தால், நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும்.

மார்ச் மாதமே ஜெனிவாவில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால், மேற்கு நாடுகள் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையை விதித்திருக்கும்.

ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது, மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றியுள்ளது. எனினும், ஆட்சிமாற்றம், சிறிலங்காவைப் பாதுகாக்காது.

வெளியக விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

முன்னைய அரசாங்கமும் கூட காலஅவகாசத்தைக் கோரியது. ஆனால் அளிக்கப்படவில்லை.

அதேவேளை, புதிய அரசாங்கமும் கூட, இந்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தைக் காண்பித்தால் மாத்திரமே, காலஅவகாசத்தையும், இடைவெளியையும் கோர முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *