மேலும்

சிறிலங்காவில் குறுக்குவழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஐ.நா அறிக்கையாளர்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

உண்மையை ஊக்குவித்தல், நீதி, நல்லிணக்கத்துக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் சிறிலங்காவில் தனது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் கடந்த மார்ச் 30ம் நாள் தொடக்கம், ஏப்ரல் 3ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்த அவர், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களுக்கும் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

அவர் தனது பயணத்தின் போதான அவதானிப்புகள் குறித்து கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இராணுவ வெற்றியின் மூலமே அனைவரும் ஒன்றாக வாழ்ந்துவிட முடியும் என்பது தவறான அணுகுமுறை என்பதை இலங்கை புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விவகாரத்தில் ஏராளமான பணிகள் இன்னும் உள்ளன.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்புக்கூறுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

நீண்டகால அடிப்படையில் கொள்கைள் மற்றும் அதற்கான ஆலோனைகளை சிறிலங்கா அரசாங்கம் வடிவமைக்கும்போது, அவை பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு இனியும் வன்முறைகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

சிறிலங்காவில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்காக, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றில் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தப்படவில்லை.

எனினும் பரந்த அளவிலான பரிந்துரைகளுடன் அளிக்கப்பட்ட சில அறிக்கைகள் வெளியாயும் இருக்கின்றன.

ஆனாலும், அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதே பொதுவான நிலைப்பாடாக இருந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை சிறிலங்கா  அரசாங்கம் உறுதி செய்யும் வகையிலோ காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை.

இதன் காரணமாக  அரசாங்கம்எடுத்த முயற்சிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டுள்ளது.

இலங்கை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும்போது இடைக்கால நிவாரணம் எனும் மனோபாவத்திலிருந்து சிறிலங்கா  அரசாங்கம் வெளிவந்து, உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை ஆராய்ந்து நீடித்திருக்க கூடிய வகையில் தீர்வுகளை முன்வைத்து அதை நடைமுறைபடுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நாட்டில் நீதித்துறையை பலப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் தேவை.அதன் மூலமே அரச நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

சிறிலங்கா முன்னேறி வரும் வேளையில் அண்மைக் காலமாக நல்லிணக்கம் எனும் சொல் அங்கு மிகவும் கவனத்தை ஈர்த்திருந்தாலும், குறுக்கு வழி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

நீதிக்கு கட்டுப்பட்ட வகையில், உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட்டு, தவறுகள் மீண்டும் நடைபெறா வண்ணம் உறுதிப்படுத்தப்பட்டாலே நல்லிணக்கம் ஏற்படும்.

நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மாற்று வழிகளை ஆராயாமல்  அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

சில ஆதாயங்களுக்காக பலதை விட்டு விடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்காமல் நடைமுறைக்கு ஒவ்வாத மாற்று வழிகளை தெரிவு செய்யுமாறு கூறுவதெல்லாம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உதவாமல் எதிர்மறையாகவே அமையும்.

நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்தவர்கள் மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு என்பது அவர்களினது அடிப்படை உரிமை.

பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையானது, அந்த முடிவை எடுக்கும் அரசின் கொள்கையாக இல்லாமல் ஆட்சியில் யார் இருந்தாலும் மாறாத அரச கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

அத்தகைய  கொள்கை முடிவுகள் அடுத்து வரும் அரசுகளால் அழித்தொழிக்க முடியாத வகையில் இருப்பதும் மிகவும் அவசியம்.

அரசாங்கம் எடுக்கும் முடிவுகளானது அடிப்படை உரிமைகள், உண்மைகளுடன் தொடர்புடையவை, நீதி மற்றும் நியாaம் சார்ந்தவை, இழப்பீடுகளுடன் சம்பந்தப்பட்டவை, இனியும் அவ்வாறானத் தவறுகள் நடைபெறாது எனும் உத்திரவாதங்கள் தேவைப்படுபவை என்பதை கவனத்தில் கொண்டு உருவக்கப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது இனம் மதம் மொழி அடையாளங்கள் போன்றவற்றை மனதில் வைத்தோ எடுக்கப்படக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *