மேலும்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சிங்கப்பூரில் மரணம்

asgiriya mahanayake theroசிறிலங்காவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற இரண்டு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின், மகாநாயக்க தேரரான, வண.உடுகம சிறீ புத்தரகித்த தேரர், இன்று சிங்கப்பூரில் காலமானார்.

நோயுற்ற நிலையில் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் மரணமானதாக, தலதா மாளிகையில் தியவதன நிலமே அறிவித்துள்ளார்.

மரணமான அஸ்கிரிய பீடாதிபதி வண.உடுகம சிறீபுத்தரகித்த தேரருக்கு வயது 85 ஆகும்.

இவரது இறுதிச்சடங்கு வரும் 12ம் நாள் கண்டி காவல்துறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வரும் 12ம் நாள் சிறிலங்காவில் தேசிய துக்கநாளாக  சிறிலங்கா அரசாங்கத்தினால் அறி்விக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில், அரசியல் செல்வாக்குப் பெற்ற முக்கியமானதொரு பௌத்த மத தலைவராக இவர் இருந்து வந்தார்.

சியாம் பௌத்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள், கண்டியை மையப்படுத்தி இயங்கி வருகின்றன. இவற்றில் மல்வத்த பீடமே, அதிகளவு செல்வாக்குப் பெற்றது.

அதற்கடுத்து, அஸ்கிரிய பீடம், மதரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றதாக இருந்து வருகிறது.

அஸ்கிரிய பீடாதிபதியின் கீழ் 565 விகாரைகளும், 1383 பௌத்த பிக்குகளும் இருந்து வருவதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *