மேலும்

யேமனில் சிக்கியோரை மீட்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா

chinese-evacuationபோர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது. 

யேமனில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான சவூதி அரேபிய கூட்டணிப் படைகளின் விமானத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,  அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் முனைப்படைந்துள்ளன.

இந்தியா தனது போர்க்கப்பல்களை யேமனுக்கு அனுப்பி, அங்கிருந்து தனது குடிமக்களை மீட்டு, அருகில் உள்ள நாடான டிஜிபோட்டிக்கு அனுப்பி வருகிறது.

அங்கிருந்து, அவர்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நேரில் சென்று ஒருங்கிணைந்திருந்தார்.

இந்தநிலையில், யேமனில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான இலங்கையர்களை மீட்க உதவும் படி, இந்தியாவிடம் சிறிலங்கா கோரியிருந்தது.

அதற்கு இந்தியா இணங்கியிருந்த போதிலும், தனது நாட்டுக் குடிமக்கள் அதிகம் இருப்பதலால் அவர்களை திருப்பி அழைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இந்தநிலையில், சிறிலங்காவுக்கு வலிந்து உதவ முன்வந்த சீனா, முதற்கட்டமாக, 39 இலங்கையர்களை விமானம் மூலமாக மீட்டு,  பஹ்ரெயினுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது.

அங்கிருந்து  அவர்களை கொழும்புக்கு அனுப்பி வைக்க உதவுவதாக, பஹ்ரெய்ன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதேவேளை, மேலும் 8 இலங்கையர்கள் டிஜிபோட்டி துறைமகத்தை கடல்வழியாக அடைந்துள்ளனர்.

அதேவேளை, மேலும் 59 இலங்கையர்களை சீன விமானம் மூலம் மீட்க நேற்று மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இவர்களை வான்வழியாக மீட்பதற்கு, சவுதி அரேபியா, யேமன் ஆகிய நாடுகளின் அனுமதி தேவைப்படுகிறது.

ஆனால் இந்த நாடுகள் அதற்கு அனுமதி வழங்காததால், நேற்று சீனாவின் மீட்பு முயற்சி கைகூடவில்லை.

இதற்கிடையே, 20 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 439 பேரை இந்தியப் போர்க்கப்பல் ஒன்று நேற்று யேமனில் இருந்து டிஜிபோட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இவர்களில் ஒரு இலங்கையர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களை மீட்க உதவும் விவகாரத்தில், இந்தியாவுடன் சீனா போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *