மேலும்

கிழக்கு கரையோர தொடருந்துப் பாதை திட்டம் – இந்தியா தீவிர பரிசீலனை

y.k.sinhaகிழக்கில் கரையோர தொடருந்துப் பாதையை அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இந்தியா அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரையில் நேற்று இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள, தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என்றில்லாமல், பொதுவாக எல்லா இலங்கை மக்களுக்கும் உதவ இந்தியா என்றும் தயாராக இருக்கிறது.

சிங்கள மக்களுக்கு இந்தியாவிலுள்ள எனது பிறப்பிடமான பீகார் மாநிலத்தோடும், தமிழர்களுக்கு தென்னிந்தியாவோடும், முஸ்லிம் மக்களுக்கும் இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு இருக்கிறது.

சிறிலங்காவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திலிருந்து நமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் வலுப்பெற்றிருக்கிறது.

சிறிலங்கா அதிபர், இந்தியப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட நான்கு உயர்மட்ட இராஜதந்திரப் பயணங்கள் பரஸ்பரம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் இடம்பெற்றிருக்கின்றன.

போருக்குப் பின்னரான மறுசீரமைப்புக்கு இந்தியா 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக அளித்திருக்கிறது.

y.k.sinha

ஊவா மாகாணத்திலும் வடக்கிலும் கிழக்கிலுமாக 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தையும் இந்தியா முன்னெடுத்துள்ளது.

இப்பொழுது வடக்கிலும், கிழக்கிலும் 26,750 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மிகுதி வீடுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடித்து விடுவோம். 4 ஆயிரம் வீடுகள் பதுளையிலும் நுவரெலியாவிலும் கட்டி முடிக்கும் திட்டமுள்ளது.

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவும். வடக்கு-தெற்கு தொடருந்துப் பாதை அமைக்கவும் நாம் உதவியிருக்கிறோம்.

கிழக்கின் கரையோரத்திற்கும் தொடருந்துப் பாதை அமைக்க உதவுமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை நாம் அக்கறையுடன் பரிசீலிப்போம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் கிழக்கிலும் பாரிய தொழிற்பேட்டைகளை ஆரம்பித்து வாழ்வாதார திட்டங்களையும் தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க நாங்கள் கரிசனையாக உள்ளோம்.

குறிப்பாக நன்னீர் மீனபிடி, விவசாயம், வாகன உதிரப்பாகங்கள், மருந்துப் பொருட்கள் உற்பத்தி, கிராமிய பொருளாதார அபிவிருத்தி, விவசாயம், உற்பத்தித் தொழிற்துறை  என்பனவற்றின் மூலம் கூடியளவு தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

கிழக்கு மாகாணத்திற்கான பல்வேறு தொழிற்துறைகள் சார்ந்த நீண்டகாலத் திட்டங்களின் முன்மொழிவுகளை சிறிலங்கா அரசாங்கத்தினூடாக நாம் கோரியிருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *