மேலும்

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

gotaதனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

‘எனக்கெதிராக முன்னாள் பாதுகாப்புச் செயலரால் பிழையான தகவல் ஒன்று முன்வைக்கப்பட்டது. நான் கட்டிய வீடு தொடர்பாக பிழையான தகவல் ஒன்றை முன்னாள் பாதுகாப்புச் செயலர் பத்திரிகை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இது என்னுடைய தனிப்பட்ட சொத்துத் தான் என்பதை உறுதிப்படுத்தி அதனுடன் தொடர்புபட்ட அனைத்து அறிக்கைகளையும் நான் சமர்ப்பித்துள்ளேன்’ என அமைச்சர் கருணாநாயக்க வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘ஒரு மாத காலமாகியும் இன்னமும் கோத்தாபய ராஜபக்ச தன்னால் முன்வைக்கப்பட்ட பிழையான குற்றச்சாட்டுத் தொடர்பில் பதிலளிக்கவில்லை.

இதனால் முன்னாள் பாதுகாப்புச் செயலரிடம் எனக்கு மானநட்ட ஈடாக இரண்டு பில்லியன் ரூபாக்களை வழங்குமாறு கோரி கடிதம் ஒன்று அனுப்பத் தீர்மானித்துள்ளேன்’ என கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *