மேலும்

இந்திய – சிறிலங்கா நல்லுறவு – அமைதித் தீர்வுக்கு வழிகாட்டுமா?

maithri-modi (1)இனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

இவ்வாறு ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் வி.சூரியநாராயண். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டதானது இந்திய-சிறிலங்கா உறவில் புதியதொரு அத்தியாயத்தைத் திறந்துள்ளது. சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் இவ்விரு நாடுகளுக்குமான உறவில் தீவிர அழுத்தங்களும் விரிசல்களும் ஏற்பட்டன.

புலிகளை அழிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமாகக் காணப்பட்டது. புலிகளை அழித்த பின்னர் நாட்டின் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவேன் என முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் உத்தரவாதம் வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றத் தவறினார்.

சிறிலங்கா அரசியலின் போக்கை சிங்கள கடும்போக்காளர்கள் மாற்றத் தொடங்கினர். இந்திய அரசாங்கத்தின் தீவிர அழுத்தத்தைத் தொடர்ந்து வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை மிக விரைவாக ஒரங்கட்டத் தொடங்கியது.

மகிந்த அரசாங்கம் இந்தியாவுடனான தனது தொடர்பைக் குறைப்பதற்காக சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் அதிக நட்புறவை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இவ்வாறான ஒரு சூழலில் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.

சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றமையை இந்தியா மனதார வரவேற்றது. சிறிலங்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் அதிபர் சிறிசேனவும் முதன் முதலாக தத்தமது உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

இவர்களின் சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கு முன்னர், இந்தியாவின் அயலுறவுக் கோட்பாடு குறிப்பாக அயலிலுள்ள சிறிய நாடுகளுடனான கோட்பாடு தொடர்பாகவும் அதன் நோக்கங்கள் தொடர்பாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்திய அயலுறவுக் கோட்பாடு கருத்தியல் மற்றும் யதார்த்தவாதம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையாகும். அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணுவதுடன் இந்தியாவுடன் விரிசலைக் கொண்டுள்ள பாகிஸ்தான் இந்த விடயத்தில் மிகவும் வேறுபட்ட தோற்றத்துடன் நோக்கப்பட வேண்டியது முதன்மைமிக்கதாகும்.

சமச்சீரற்ற எதிரெதிர் கோட்பாடுகள் இந்தியாவின் சிறிய அயல்நாடுகளுடனான உறவிற்கு வழிகாட்டிகளாகும். மே 15, 1954ல் இந்தியாவின் மக்களவையில் ஜவகர்லால் நேரு உரையாற்றிய போது இந்தக் கோட்பாடானது குறிப்பாக சிறிலங்காவை நோக்கிய இந்தியாவின் அயலுறவுக் கோட்பாடு வரையறுக்கப்பட்டது.

‘சுதந்திர சிலோன் மற்றும் நட்பார்ந்த சிலோனையே நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நாடுகளை விட சிலோன் ஒவ்வொரு விடயங்களிலும் எமக்கு மிகவும் நெருக்கமாகக் காணப்படுகிறது. அதாவது கலாசார ரீதியாக, வரலாற்று ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக சிலோன் எமக்கு மிக நெருக்கமாகக் காணப்படுகிறது.

சிலோனை நாங்கள் ஏன் பேராசை மிக்க கண்களோடு நோக்க வேண்டும்? நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் இவ்வாறான ஒரு அச்சம் சிலோனில் நிலவுகிறது. இந்த அச்சத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமான கருத்துக்களைக் கூறவேண்டாம் என நான் இந்த அவையிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என ஜவர்கலால் நேரு குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 06, 1950ல் நாடாளுமன்றில் நேரு ஆற்றிய உரையில் இந்தியா தனது அயலுறவுக் கோட்பாட்டை எவ்வாறு பேணவேண்டும் என்பது மேலும் வரையறுக்கப்பட்டது.

‘நேபாளம் சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். நேபாளத்தில் எந்தவொரு பிழையும் இடம்பெறுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நேபாளத்தை  பலவீனப்படுத்தும் எந்தவொன்றையும் நாம் அனுமதியோம். ஏனெனில் இது எமது சொந்தப் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக அமையும்’ என நேரு தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

1983 யூலையில் சிறிலங்காவில் கலவரம் மூண்ட போது, அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தனா வெளிச்சக்திகளின் உதவியை நாடியிருந்தார். ஆனால் இதில் இந்தியா வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது.

சிறிலங்கா பிறிதொரு நாடல்ல எனவும் சிறிலங்காவில் என்ன நடந்தாலும் அது இந்தியாவுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திரா காந்தி அறிவித்தார். சிறிலங்காவில் இடம்பெறும் நிலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக தனது பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவை உடனடியாக சிறிலங்காவுக்கு அனுப்புவதாக இந்திரா காந்தி தொலைபேசி மூலம் ஜெயவர்த்தனாவிடம் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக இந்திரா காந்தி, ஜெயவர்த்தனவிடம் ஆலோசிக்கவில்லை. இதன் பின்னர் என்ன நடந்தது என்பது வரலாற்றுப் பதிவாகிவிட்டது.

இதேபோன்று சிறிலங்கா துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிற்பதற்கு மகிந்த ராஜபக்ச அனுமதித்தார். இதன்மூலம் இவர் இந்தியாவின் அதிருப்திக்கு உள்ளாகினார். இவ்வாறான ஒரு சூழலில் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு இந்தியா முயற்சித்தது.

சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, சமரவீர மற்றும் சிறிசேன ஆகியோர் ராஜபக்சவுக்கு எதிராக எதிரணி என்ற பொதுப் பெயரில் ஒன்றுகூடினர். அதாவது இவர்கள் சிறிலங்கா மீதான சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் இந்திய-சிறிலங்கா உறவில் நல்லுறவைப் பேண விரும்பினர்.

சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தலில் அங்கு வாழும் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்களவர்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில், சிறிசேனவை விட மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். சிங்களவர்களின் அதிக ஆதரவைப் பெறுவதை முன்னுரிமைப்படுத்த வேண்டியது சிறிசேன அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது இயற்கையானதாகும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் இந்த மூலோபாயம் கைக்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமித்தமை, சிறிலங்காவின் உச்ச நீதிமன்றின் பிரதம நீதியரசராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை மற்றும் வடக்கிலிருந்து இராணுவத்தைப் பின்வாங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை போன்ற விடயங்களின் ஊடாக சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு சிறிசேன அரசாங்கம் சாதகமான சமிக்கைகளைக் காண்பித்துள்ளது.

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கு மேலும் காலஅவகாசம் தேவை என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா விடம் கோரிக்கை விடுத்துள்ளதையும் இங்கு நோக்க வேண்டும்.

இவ்வாறான விசாரணைக்கு இந்தியா மற்றும் அனைத்துலக சட்ட வல்லுனர்களின் உதவியை கொழும்பு பெற்றுக் கொள்வதற்கும் குறுகிய காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிப்பதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும், சிறிலங்கா மீது இந்தியா தனது அழுத்தத்தை வழங்க வேண்டும்.

சிறிசேன இந்தியாவுக்கான தனது பயணத்தின் போது அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பில் கைச்சாத்திட்டமை மிகவும் முக்கியமான விடயமாகும். இதைவிட, விவசாய ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு, நலந்தா பல்கலைக்கழகம் செயற்படுவதற்கான சிறிலங்காவின் உதவி போன்ற பல்வேறு விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது.

மீனவர் விவகாரம், இன மீளிணக்கப்பாடு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு போன்றன இப்பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டன.

இந்தியாவுடனான சிறிலங்காவின் அணுசக்தி உடன்பாடானது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. மே 1974ல் இந்தியா தனது அணுவாயுதத்தை பொக்ரனில் பரிசோதித்த போது அதனை சிறிலங்கா விமர்சித்தது.

அக்காலப்பகுதியில் சிறிலங்காவானது இந்திய மாக்கடலை ஒரு சமாதான வலயமாகக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.  வாஜ்பாயி அரசாங்கம் அணுவாயுப் பரிசோதனையை மேற்கொண்ட போது, சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் அதனை வரவேற்றிருந்தார்.

ராஜபக்ச அரசாங்கம் கூடங்குளம் அணுஉலை தொடர்பான தனது எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. ஆனால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இந்த விடயத்தில் அமைதி காத்தது.

அணுசக்தியை வன்முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதில் தனது சிறிய அயல்நாடுகளுக்கு உதவுவதற்கான ஆளுமையை இந்தியா கொண்டுள்ளது என்பதையே சிறிலங்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு சுட்டிநிற்கிறது.

இனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வொன்றை எட்டுவதற்குத் தான் தயாராகவுள்ளதாகவும், இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்த விருப்பங் கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு கலந்துரையாடல் இந்தியாவுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அதிகூடிய பரப்புக்களை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கும்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையானது இந்திய அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய மூன்று தரப்பினரிடையே நடைபெறுவதற்கான வழியை உண்டுபண்ணும்.

உலகத் தமிழர் பேரவையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பைப் பேணுவது என்பதும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதியாக இதனை அங்கீகரித்துள்ளமையும் இதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *