மேலும்

சம்பந்தன் பங்கேற்றது கூட்டமைப்பின் முடிவு அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Suresh-Premachandranசிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவே என்றும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அல்ல எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவு.

அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பாக, எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பது உகந்ததாக இருக்காது என நானும், மாவை சேனாதிராசாவும் அவரிடம் கூறியிருந்தோம்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்பது என்பது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபற்றாமல் இருந்து வந்தன.

ஆனால் இப்போது எந்த அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவர் கலந்து கொண்டார் என்பது யாருக்கும் தெரியாது.

அவரது பங்கேற்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சுதந்திர நாள் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்து ஏற்புடையது அல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *