மேலும்

ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு அடம்

parliamentஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

நேற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாடாளுமன்றம் கூடிய போது, உறுப்பினர்களின் ஆசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்து, நாடாளுமன்றச் செயலரிடம் சென்ற அவர், தனக்கு ஆளும்கட்சி வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார்.

சபை முதல்வர் அளித்த பட்டியலின் படியே தாம் ஆசன வரிசையை ஒழுங்கு செய்ததாகவும், அதில் திஸ்ஸ அத்தநாயக்கவின் பெயர் இருக்கவில்லை என்றும் நாடாளுமன்ற செயலர் தெரிவித்தார்.

இதையடுத்து, சபாநாயகரைச் சந்தித்த திஸ்ஸ அத்தநாயக்க இதுபற்றி முறையிட்டார்.

அப்போது, நாடாளுமன்றச் செயலரை சந்தித்து இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு அவர் அனுப்பி வைத்தார்.

அதையடுத்து, மீண்டும் நாடாளுமன்றச் செயலரிடம் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு, எதிர்க்கட்சி வரிசையில் தான் ஆசனம் ஒதுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தான் ஐதேகவில் இருந்த நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதாகவும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டால், தனது பதவி பறிக்கப்பட்டு விடும் ஆபத்து உள்ளதாகவும் அத்தநாயக்க தெரிவித்தார்.

எனினும், இந்த விவகாரத்துக்கு தீர்வு கிடைக்காத நிலையில், நேற்றைய அமர்வில் பங்கு பற்றாமலேயே திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறினார்.

ஆசனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே அவர் நாடாளுமன்றம் திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *