மேலும்

தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை

R.sampanthanதமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று முதல் முறையாக கூடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

”அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

ஆதரவு வழங்குவதற்கு நாம் எந்தவொரு பதவியையும் கோரவில்லை. எமது மக்களுக்கும் எமது தேர்தல் பரப்புரை நடவடிக்கை பற்றி தெளிவாக விளக்கினோம்.

எனினும், சில தரப்பு இனவாத கோணத்தில் பிரசாரத்தை முன்னெடுத்தது. இறுதியில் அது பயனளிக்கவில்லை.

வடக்கு, கிழக்கிலும் அதேபோல் முழு நாட்டையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஒருமித்த பதிலை தேர்தலில் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டின் அனைத்து மக்களுடனும் இணைந்து தமிழ் பேசும் மக்களும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இணங்கி, நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான – நியாயமான – பயனளிக்கக்கூடிய – நீடித்து நிலைக்கக் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

60 வருடங்களாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளதால் இந்த நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன.

எனவே, முழு நாட்டினதும் நலன் கருதி தமிழ் மக்களின் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதவேண்டும்.

அந்த இலக்கை அடைவதற்கு நாம் எமது பூரண ஆதரவையும் வழங்குவோம். பெரும்பாலான இலங்கை மக்கள் இதற்கு ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்”  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *