மேலும்

கோத்தாவின் வசம் இருந்த 3322 துப்பாக்கிகளைக் காணவில்லை – விசாரணை ஆரம்பம்

armouryசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து, 3322 ஆயுதங்கள் காணாமற்போயுள்ளது குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதிபர் தேர்தலையடுத்து, மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சதிப் புரட்சிக்குப் பயன்படுத்துவதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்றுக்காலை இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு களஞ்சிய அறைகளிலும், 151 துப்பாக்கிகள் மட்டும் இருப்பது தெரியவந்தது.

எனினும், 3,473 ஆயுதங்களை அங்கு களஞ்சியப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, காணாமற்போயுள்ள 3322 ஆயுதங்களுக்கு என்ன நடந்தது, அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 3322 ஆயுதங்களும் பணியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரக்ன லங்கா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்துக்கு, ரி-56 துப்பாக்கிகள் -2300, எஸ்-84 துப்பாக்கிகள்-670, எல்.எம்.ஜி துப்பாக்கிகள் -385, எம்பிஎம்ஜி துப்பாக்கிகள்- 10, எஸ்எல்ஆர் துப்பாக்கிகள்-11, 12 போர் ரிபிட்டர் துப்பாக்கிகள்- 79 வேட்டைத்துப்பாக்கிகள்-10 என்பனவற்றை வைத்திருப்பதற்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், களஞ்சியங்களில்,ரி-56 துப்பாக்கிகள்-44, எஸ்-84 துப்பாக்கிகள் -35, எல்எம்ஜிகள் -32. எம்பிஎம்ஜி-01, ரிபிட்டர் துப்பாக்கிகள்-29, வேட்டைத்துப்பாக்கிகள்-10 என்பனவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரக்ன லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டு அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாகும்.

இந்த நிறுவனத்தில், முன்னாள் படையினரே பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *