மேலும்

மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி

john_kerryமனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், குஜராத் மாநிலம் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வாழ்த்து தெரிவித்திருந்தார் ஜோன் கெரி.

இந்த நிலையில் இன்று சிறிலங்கா விவகாரம் குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உடனடியாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவின் புதிய அதிபருடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவு தற்போது வலுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளேன்.

தேர்தலுக்கு முன்னர், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசிய போது, என்ன நடந்தாலும், அமைதியான செயல்முறைகள் முக்கியமானது என்று எடுத்துக் கூறியிருந்தேன்.

சிறிலங்காவில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் தேர்தல் நடத்தப்பட்டு, அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெற்றது நல்லது.

எனினும், சிறிலங்காவில் இன்னமும் உண்மையான சவால்கள் உள்ளன.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உடனடியாக பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு மைத்திரிபால சிறிசேனவுடனான உரையாடலின் போது கேட்டுக் கொண்டேன்.

சிறிலங்காவில் நாம் இப்போது வேறொரு விளைவை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *