மேலும்

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கலதாரி விடுதியில் இன்று காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

“வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், நாட்டில் நீதியான ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியமானது.

அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை ஒழித்து, சுதந்திரமான, ஆணைக்குழுக்களை உருவாக்கி, நீதித்துறை, காவல்துறை, பொதுச்சேவைகள், தேர்தல் ஆணையம், கணக்காய்வாளர் நாயகம் பணியகம் ஆகியவற்றின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவேன்.

ஆளும்கட்சியின் பரப்புரைக் கருவியாக செயற்படுவதில் இருந்து அரச ஊடகங்களை விடுவித்து, நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவேன்.

முன்பொரு காலத்தில் அனைத்துலக சமூகத்தின் முன்னணி உறுப்பினராகச் செயற்பட்ட சிறிலங்கா, இப்போது அனைத்துலக சமூகத்தின் பெரும்பாலான நாடுகள் மத்தியில் நம்பிக்கையிழந்து விட்டது வருத்தத்துக்குரியது.

மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா தீர்மானங்களுக்கு சிறிலங்கா இலக்காகி வருகிறது.

அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும், தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளுக்கு முடிவு கட்டுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த இலக்குகளை அடைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு தர வேண்டும்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *