மேலும்

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு மோடியின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் உதவி?

Arvind Guptaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய அரவிந்த் குப்தா என்ற தகவல் தொழில்நுட்ப வல்லுனரே, சிறிலங்கா அதிபரின் வெற்றிக்கு பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான அவரிடம் இதுபற்றிக்  கேள்வி எழுப்பிய போது, தாம் தேவையற்ற வகையில் இந்த சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதாகவும், இதனால் தாம் குழப்பமடைந்துள்ளதாகவும் கூறி, இந்தச் செய்தியை நிராகரித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடும் தனிநபர்கள் பற்றிய விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள அதிபர் செயலக உயர்மட்ட வட்டாரங்கள் மறுத்துள்ளன.

சிறிலங்காவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக உதவி வருவதாகவும், சிலர் தொண்டு அடிப்படையிலும், வேறு சிலர் கொடுப்பனவுக்காகவும் பணியாற்றி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கடந்த நொவம்பர் மாதம் அரவிந்த் குப்தா, கொழும்பு சென்றதாகவும், சிலவேளைகளில் அவர் இந்தப் பயணத்தின் போது அவர் சிறிலங்கா அதிபரின் தேர்தல் குழுவில் தனிப்பட்ட ரிதியாக பணியாற்றியிருக்கலாம் என்றும் புதுடெல்லியில் உள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பயணம் குறித்து அரவிந்த் குப்தாவிடம் கேள்வி எழுப்பிய போது,  தாம் எந்த வணிக நோக்கத்துக்காகவும், சிறிலங்கா செல்லவில்லை என்றும், அங்கு தேர்தல் நோக்கங்களுக்காக எந்தவொரு அரசியல் கட்சியும் தம்மை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *