மேலும்

சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும்

Elections-amanthaசிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

இவ்வாறு  IPS-Inter Press Service என்னும் செய்தி நிறுவனத்திற்காக Amantha Perera எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தான் வாழும் கொழும்பு நகரானது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் மற்றும் நத்தார் பண்டிகையை எதிர்பார்த்து மிக வேகமாக அலங்கரிக்கப்படுவதாக பிரியந்த வக்விற்ற கூறுகிறார். திரும்பும் இடமெல்லாம் கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் இதர அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுவதாக இவர் கூறுகிறார். சிறிலங்காவில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பில் தற்போது அரசியற் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், நத்தார் ஏற்பாடுகள் குறைவடைந்துள்ளன.

நவம்பர் 21 அன்று சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவு அறிவித்து நான்கு நாட்களின் பிறகு, கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் குறைந்தது 1800 வரையான உருவப்படங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் பரப்புரை அமைப்பு தெரிவித்துள்ளது.

முப்பதாண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009ல் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மக்களின் பேராதவு கிடைத்தது.

ஆனால் போருக்குப் பின்னான கடந்த ஆண்டுகளில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வாழும் மக்கள் அரசியல் நெருக்கடிகளை விட பொருளாதார நெருக்கடிகளை அதிகம் சந்தித்து வருவதால் ராஜபக்சவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சவின் சொந்த அரசியற் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக அண்மைய நாட்கள் வரை பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அக்கட்சியை விட்டு நீங்கி எதிர்க்கட்சியின் பிரதான அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இதுநாள் வரை சிறிலங்கா அதிபரின் சொந்தக் கட்சியின் பொதுச் செயலராக இருந்தவரே தற்போது இவரது பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராவார்.

அதிபர் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் இதுவரை சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து எட்டுப் பேர் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளனர். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியாக இருந்ததும், பலம்மிக்க தேசியவாதக் கட்சியுமான ஜாதிக ஹெல உறுமயவும் இடம்பெறவுள்ள தேர்தலில் ராஜபக்சவை எதிர்க்கவுள்ளதாக அறிவித்தள்ளது.

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

“எனது பிள்ளைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் எனது குடும்பத்தைப் பராமரிப்பதற்காகவும் நான் பல்வேறு கடினங்களை எதிர்நோக்குகின்ற நிலையில் இந்த அரசியல்வாதிகள் இந்த வேளையில் தமது முகங்களை மக்களுக்குக் காண்பிப்பதற்காக பல மில்லியன்களை வீணாக்குகின்றனர்” என காலியைச் சொந்த இடமாகக் கொண்டவரும் கடந்த பத்தாண்டாக சிறிலங்காவின் தலைநகரில் பணிபுரிபவருமான 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான வக்விற்ற தெரிவித்தார்.

வக்விற்ற சிறியதொரு வெதுப்பகத்தை நடாத்தி வருகிறார். இது கொழும்பின் புறநகர்ப் பகுதியில் காணப்படுகிறது. இவர் வீடுவீடாகச் சென்று பாண் விற்பனை செய்து தனது வருவாயை ஈட்டுகிறார். இவர் ஒரு மாதத்திற்கு அண்ணளவாக 30,000 ரூபாக்களை இலாபமாகப் பெற்றார். ஆனால் கடந்த ஆண்டில் இதில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் சிறியதொரு மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றை நடாத்துவதற்கான முயற்சியில் இவர் ஈடுபட்டார். ஆனால் இதில் இவருக்கு ரூ100,000 நட்டம் ஏற்பட்டது. இது இந்த நாட்டைப் பொறுத்தளவில் மிகப் பெரிய தொகையாகும். “மக்களிடம் பணம் இல்லை. மக்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்கு மிகவும் கடினப்படுகிறார்கள்” என வக்விற்ற தெரிவித்தார்.

சிறிலங்காவானது 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, ராஜபக்ச அரசாங்கமானது நாட்டில் மேற்கொள்ளப்படும் புதிய துறைமுக அபிவிருத்தி, விமான நிலைய அபிவிருத்தி போன்ற பல்வேறு பாரிய கட்டுமாணத் திட்டங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதால் அரசாங்கமே அதிக இலாபத்தை ஈட்டுகின்றது. இதேவேளையில் சிறிலங்கா வாழ் குறைந்த வருமானத்தைப் பெறுவோர் தாம் தமக்கான வருவாயைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறுகின்றனர்.

சிறிலங்காவின் தேசிய வறுமை நிலையானது 6.7 சதவீதமாகக் காணப்படுகிறது. ஆனால் சிறிலங்காவின் பெரும்பாலான கிராமங்களில் இந்த சதவீதமானது அதிகமாகக் காணப்படுகிறது. வக்விற்றாவின் சொந்த மாவட்டமான காலியில் இந்த வீதமானது 9.9 ஆகவும், சிறிலங்காவின் தென்மத்திய மாவட்டமான மொனறாகலையில் வறுமைக் கோட்டில் வாழ்வோர் 20.8 சதவீதமாகவும், இதேபோன்று தென்மேல் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரான இரத்தினபுரி மாவட்டத்தின் வறுமை நிலையானது 10.4 சதவீதமாகவும் காணப்படுவதாக சிறிலங்கா அரசாங்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சிறிலங்காவில் வாழும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களது வருவாய் மிகக் குறைவாகும். அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளதால் சிறிலங்கா வாழ் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் நாளாந்தத்தைக் கழிப்பதில் பெரும் சிரமப்படுகின்றனர்.

இதேபோன்று 11 மாத கால நீண்ட வறட்சியானது மூன்றில் ஒரு தேயிலைத் தோட்டங்களைப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டில் நான்கு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், இந்த ஆண்டில் இதில் 20 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவில் நிலவும் காலநிலை சீர்கேட்டால் அரசியின் விலையானது 33 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதேபோன்று மீன் மற்றும் மரக்கறிகளின் விலையிலும் தளம்பல் ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவில் வாழும் மக்கள் தமது நாளாந்தத்தைக் கழிப்பதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் அதேவேளையில், மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

“தேர்தற் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படமாட்டாது. ஏழை மக்களுக்கு உதவக்கூடிய மிகவும் உறுதியான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என காலி மாவட்டத்தைச் சேர்ந்த நெல் விவசாயியான அஜித் திசநாயக்க கூறுகிறார்.

சிறிலங்காவின் வடக்கில் தொடரப்பட்ட யுத்தத்தின் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. மே 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து, சிறிலங்கா அரசாங்கமானது வடக்கின் மீள்கட்டுமாணத் திட்டங்களுக்காக மூன்று மில்லியன் டொலர்கள் வரை முதலிட்டுள்ளது. ஆனால் வடக்கில் இன்னமும் வறுமை நிலவுகிறது.

சிறிலங்காவின் குருதி தோய்ந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முல்லைத் தீவு மாவட்டமே சிறிலங்காவில் மிகவும் வறுமைநிலை கூடிய பிரதேசமாகும். இங்கு 28.3 சதவீத வறுமை நிலவுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையானது 12.7 சதவீதமாகும்.

“நாங்கள் தற்போது வறுமை என்கின்ற பிறிதொரு பிரச்சினைக்கு எதிராகப் போராடுகிறோம்” என முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் என்கின்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 38வயதான மாற்றுவலுவுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான தியாகராசு சந்திரகுமார் தெரிவித்தார்.

பல்வேறு புதிய மின்சார வழங்கல் திட்டம் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் தனது கிராம மக்கள் தங்களது வீடுகளில் மின்சாரத்தைப் பெறுவதற்கு இன்னமும் காத்திருப்பதாக சந்திரகுமார் தெரிவித்தார். “மின்சார இணைப்பை எமது வீடுகளுக்குப் பெற்றுக் கொள்வதற்கான போதியளவு பணம் எம்மிடம் இல்லை. சிலவேளைகளில் பேரூந்தில் பயணிப்பதற்குக் கூட எம்மிடம் பணம் இருப்பதில்லை” என போரின் போது காயமுற்றதால் தற்போது சக்கர நாற்காலியில் உலாவும் சந்திரகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் அதியுயர் அரசியல் பதவியிலிருந்து கொண்டு தேர்தல் களத்தில் இறங்கும் வேட்பாளர்களிடம் வக்விற்றவும் சந்திரகுமாரும் மிகச் சாதாரணமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றனர். அதாவது நாங்கள் முன்பிருந்ததை விட சிறப்பான வாழ்வை வாழ்வதற்கான வழியை உறுதிப்படுத்துமாறு இவர்கள் இருவரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கொழும்பில் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 24 அன்று கொழும்பு பங்குச் சந்தையானது 2.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இது ஆகஸ்ட் 2013லிருந்து இதுவரை காலமுமான பங்குச் சந்தை வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியாகும்.

நாட்டின் அரசியற் சூழலில் உறுதியான நிலை எட்டப்படும் வரை உள்நாட்டு முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி கொழும்பில் முதலீடு செய்வதில் தயக்கம் காண்பிப்பார்கள் என கொள்கை ஆய்வுக்கான தேசிய நிறுவகத்தைச் சேர்ந்த பொருளியலாளர் அனுஸ்கா விஜேயசிங்க தெரிவித்தார்.

“கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் மிகவும் உறுதித்தன்மையுடன் நிறுவப்பட்டுள்ளதால் இவற்றுள் ஏதாவது குழப்பங்கள் ஏற்படும் போது அதனை முதலீட்டாளர்கள் எதிர்மறையாகவே நோக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே அண்மையில் சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் மிகவும் உன்னிப்பாக ஆராயப்படும்” என பொருளியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளை வெற்றிகொள்வதை குறிக்கோளாகக் கொள்ளாது நாட்டில் நீண்ட கால கோட்பாடுகளைக் கருத்திற்கொண்டே தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் எனவும் விஜேயசிங்க மேலும் தெரிவித்தார்.

“சிறிலங்கா வாழ் கிராம மக்களை முன்னேற்றுவதற்கும் அவர்களின் வறுமையைப் போக்குவதற்குமான கோட்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மக்களின் ஆற்றல்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, அவர்களுக்கான பொருளாதார வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இது சிறிலங்கா வாழ் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதற்கு உதவும்” என விஜேயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் வாழும் 20 சதவீத செல்வந்தர்கள் நாட்டின் மொத்த வருமானத்தின் அரைவாசியைப் பெறும் அதேவேளையில், 20 சதவீத ஏழைமக்கள் நாட்டின் மொத்த வருமானத்தின் ஐந்து சதவீதத்தை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர் என்பதை அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தல் மூலமோ அல்லது தேர்தல் மூலமன்றியோ குறுகிய காலத்தில் தமது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என வக்விற்ற மற்றும் சந்திரகுமார் போன்ற சிறிலங்கா வாழ் மக்கள் கருதுகின்றனர். “தேர்தலில் வெற்றி பெற்று எவர் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்றாலும் என்னைப் போன்ற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வக்விற்ற தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *