மேலும்

இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?

விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது.India-srilanka-Flag ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை.

இவ்வாறு The Economic Times ஆங்கில ஊடகத்தில் Ashok Malik எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன? சிறிலங்காச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் ஐவருக்கு அந்நாட்டு அரசாங்கமானது அண்மையில் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கியிருந்தமையே இந்திய-சிறிலங்கா உறவு இவ்வளவு சீர்குலைவதற்கான அடிப்படைக் காரணமாகும். இவர்கள் ஐவரும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சிறிலங்காத் துறைமுகத்தில் சீன அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் தரித்து நின்றமையும் இந்திய-சிறிலங்கா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போதியளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாதவரை இக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மழுப்பலாகப் பதிலளித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது சிறிலங்கா தொடர்பில் குறுகிய வெளியுறவுக் கொள்கையை வரையறுத்திருந்தது. சிறிலங்கா மீதான இத்தகைய குறுகியதொரு வெளியுறவுக் கோட்பாட்டை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் சென்னையிலுள்ள துணை அரசியற் குழுக்களும் பின்பற்றின.

பிரதமர் என்ற வகையில் மன்மோகன் சிங், சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவில்லை. இந்த விடயமும் கொழும்பை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்நிலையிலேயே நரேந்திர மோடியின் தேர்தலை மிகவும் அதிகளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு அனைத்துலக நாடுகளின் தலைவராக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்ததாக கேலிபண்ணப்பட்டது.

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் சிறிலங்கா மீதான அணுகுமுறையானது வெளிப்படையானதும், தெளிவானதுமாகக் காணப்படுகிறது. இதனாலேயே நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்வில் பங்கெடுப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தென்னாசிய நாடுகளின் தலைவர்களைத் தனது பதவியேற்பு வைபவத்திற்கு வருமாறு நரேந்திர மோடி அழைத்ததானது, ராஜபக்சவுடன் மீண்டும் உறவுகளைக் கட்டியெழுப்பி சிறிலங்காவுடனான உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இவ்வாறான சூழலில், தற்போதைய சில மாதங்களாக ராஜபக்ச அரசாங்கமானது தமக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி நடக்கவில்லை என்பது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதங்கமாகும். ராஜபக்ச நேரடியாக, வெளிப்படையாகத் தமது விவகாரங்களில் அணுகவில்லை என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது.

உள்நாட்டுப் போரானது இறுதிக்கட்டத்தை அடைந்ததன் பின்னர், விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை. இந்நிலையில் ராஜபக்சவின் அரசியல் அவாக்களானது நடைமுறைச் சாத்தியத்தை நோக்கி நகரலாம்.

சீனாவானது இன்று சிறிலங்காவின் மிக முக்கிய பொருளாதாரப் பங்காளியாக மாறியுள்ளது. கடந்த நான்கு பத்தாண்டுகளில், சிறிலங்காவுக்கு சீனாவானது கடனாகவும் மானியமாகவும் ஐந்து பில்லியன் டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது. சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், சீனாவின் நிதியில் 80 சதவீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் கட்டுமாணத் திட்டங்களில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது. குறிப்பாக கொழும்பில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு உதவியுள்ளது.

கடந்த செப்ரெம்பரில், சீன அதிபர் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, சீனாவின் புதிய கடல்வழி பட்டுப் பாதைத் திட்டத்தில் சிறிலங்கா அதிபர் மிகவும் ஆர்வத்தோடு கைச்சாத்திட்டார். இத்திட்டத்தில் மகிந்த ராஜபக்ச கைச்சாத்திட்டதன் மூலம் தென்னாசியாவின் சக்தி மிக்க நாடாக சீனா உருவாவதற்கான தனது அங்கீகாரத்தை சட்ட ரீதியாக வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் கட்டுமாணத் திட்டங்களுக்கு இந்தியாவும் நிதிவழங்கியுள்ளது. ஆனால் இவற்றை செயல்படுத்துவதில் சில இழுபறிகள் நிலவுகின்றன. இதன்மூலம் இந்தியாவானது சிறிலங்காவுடன் பொருளாதாரத் தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அசட்டைசெய்கின்றது எனக்கருதக் கூடாது.

கொழும்புத் துறைமுகமானது பொருட்களை மாற்றுவதற்கான ஒரு மையமாகக் காணப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் ஆதரவளிக்கிறது. கொழும்புத் துறைமுகமானது இந்தியாவுக்கு மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் கேந்திர முக்கியத்துவ மையமாக விளங்குகிறது. சீனாவின் கடல்சார் பட்டுப் பாதை வலைப்பின்னலானது கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தி செயல்ப்படுத்தப்படலாம். இதற்காக சிறிலங்கா, இந்தியாவை முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும் எனக் கருதமுடியாது.

ஒரு பத்தாண்டாக ஒரு நாட்டை ஆளும் தலைவர் என்ற வகையில் ராஜபக்சவின் செயற்பாடுகள் முதிர்ச்சியானதாகக் காணப்படவில்லை. இவரது இவ்வாறான முதிர்ச்சியற்ற செயற்பாடுகளைப் பயன்படுத்தி சீனா கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மூலோபாய நலனை அடைந்துள்ளது.  ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் உட்பட இவரது தற்போதைய கூட்டாளிகள் தனிப்பட்ட ரீதியாக சீன நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சிலநேரங்களில் இந்தப் பணத்தை மீண்டும் சீனாவுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியேற்படும். அல்லது இதற்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்பட வேண்டியேற்படும். இந்த இழப்பீடானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதக அமைந்துவிடுமோ என இந்தியா அஞ்சுகிறது.

ஜனவரி 2015ல், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் தேர்தல் இடம்பெறவேண்டிய காலத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெறுகின்றது. தேர்தல் பரப்புரைகள் எதிர்வுகூற முடியாதவையாக உள்ளன. தேர்தல் பரப்புரையில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படும். சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றியை மையப்படுத்தியதாகவோ அல்லது இந்தியாவை வெறுப்பேற்றுவதாகவோ அமையாது என நம்பப்படுகிறது.

இது உண்மையாயின் சிறிலங்கா அரசாங்கம் ‘நிர்ப்பந்த இராஜதந்திரத்திற்கு’ மட்டுமே தற்போது பதிலளிக்க முடியும் என நம்பும் புதுடில்லியைச் சார்ந்தவர்களை மட்டுமே இது பலப்படுத்தும். இது பொதுவாகவே அனுதாபத்தைக் காண்பிக்கும் இந்தியப் பிரதமருக்கும் பேரிடியைக் கொடுப்பதாக அமையும்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவானது தற்போது இந்தியாவுக்கான மிகப் பெரிய சவாலாகக் காணப்படுகிறது. இன்று சீனா, சிறிலங்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. இது நாளை நேபாளத்திற்கோ அல்லது பங்களாதேசிற்கோ விரிவுபடுத்தப்படலாம். மோடி தனது அயல்நாடுகளைப் பாதுகாப்பதற்கான பலம்பொருந்திய பொருளாதாரத்தை அல்லது மிகக் கடுமையான அதிகாரத்தை நிலைநாட்டும் வரை, சீனா இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதை நிறுத்தாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *