மேலும்

காற்றில் பறந்த கோத்தாவின் வாக்குறுதிகள் – நிறைவேற்றும்படி மன்னார் ஆயர் கோரிக்கை

mannar-bishop-gotaமுள்ளிக்குளத்தில் கடற்படையினர் தளமிட்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மாற்று இடங்களில் மீளக்குடியேற்றுவதாக  வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாயய ராஜபக்சவிடம், மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை மன்னார் ஆயர் தலைமையிலான குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, மன்னார், முசலி பிரதேசத்தில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக்கொண்ட படி, அவர்கள் வேறிடத்தில் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிக்குளம் பிரதேசத்திற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் விஜயம் செய்த போது, பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டதால் மீளக்குடியேற முடியாதுள்ள மக்களின் வாழ்க்கைத் தேவைகள் குறித்து, கேட்டறிந்ததுடன் 30க்கும் மேற்பட்ட விடயங்கள் உடனடியாகச் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும், அரசஅதிகாரிகள் இதுவிடயத்தில் உரிய கவனம்  செலுத்தவில்லை.

ஐந்து விடயங்கள் மாத்திரமே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 30 விடயங்கள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

இவற்றுக்குப் பொறுப்பான மாவட்ட அரச அதிபர், அந்தப் பகுதிக்கான பிரதேச செயராளர், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ரிசாட் பதியுதீன் போன்ற எவரும் இதுவிடத்தில் கவனம் செலுத்தவில்லை என்று பாதுகாப்பு செயலாளரிடம் சுட்டிக்காட்டினோம்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.

கிராமத்து மக்களின் வீடுகளையோ வயற்காணிகளையோ, கிராமத்தையோ விட்டுச் செல்வதற்குக் கடற்படையினர் தயாராக இல்லை.

அந்தக் கிராமத்து மக்கள் வசிப்பதற்கென ஊரின் வடக்குப் பகுதியில் காட்டுப்பாங்கான இடத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பாதுகாப்பு செயலர் அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

முள்ளிக்குளம் மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு படகுகள் வழங்கப்பட வேண்டும்.

விவசாயிகள் அவர்களின் வயற்காணிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன் அந்தக் காணிகளுக்குரிய குளங்களைப் புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *