மேலும்

‘மீறியபெடக் கிராமத்திற்கு மண்சரிவு அபாயங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை’

Meeriyabeddaபதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு IRIN வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஒக்ரோபர் 29ல் சிறிலங்காவின் மலையகக் கிராமம் ஒன்றில் மண்சரிவால் ஏற்பட்ட இழப்புக்களை சிறந்த அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுப் பயிற்சி மூலம் தவிர்த்திருக்க முடியும் என சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் மலையகத்திலுள்ள பதுளை மாவட்டத்தின் மீறியாபெடக் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு பொதுமக்களின் உடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 32 மக்கள் காணாமற் போயுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது. மலையகத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கு ஆறு நாட்களின் முன்னர், சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் ஆழிப்பேரலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்கியிருந்தது. இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையானது மலையகத்தில் தற்போது மண்சரிவு ஏற்பட்ட மீறியபெடக் கிராமத்திற்கு அருகிலுள்ள இரண்டு கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு கிராமங்களிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டே இங்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஆனால் மீறியகொடவில் இவ்விழிப்புணர்வு வழங்கப்படவில்லை. இதேபோன்று பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மீறியபெடக் கிராமத்தில் 2009 காலப்பகுதியில் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதால் இவ்வாண்டு இக்கிராமம் தெரிவுசெய்யப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காத் தீவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 31,000 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற பின்னர், ஆழிப்பேரலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னாயத்தப் பயிற்சிகள் வழங்குவதில் அதிக கவனம் குவிக்கப்பட்டுள்ளது போல் மண்சரிவுப் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படவேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் 20 சதவீத பிரதேசங்கள் குறிப்பாக மலையகப் பிரதேசமானது மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இங்கு வறுமை நிலை உச்சளவில் காணப்படுவதாகவும் தேசிய கட்டட வள நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 900,000 மக்களைக் கொண்ட சிறிலங்காவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அதாவது மலையக சமூகத்தினர் நாட்டின் மிகவும் வறுமைநிலையில் வாழும் மக்களாகக் காணப்படுகின்றனர். தேயிலை உற்பத்தி செய்யப்படும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள், தேசிய சராசரித் தொகையின் அரைவாசியினராவார் என ஏப்ரல் 2014ல் வெளியிடப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மீறியபெடவில் மண்சரிவு ஏற்படப்போவதாக தேசிய கட்டட வள நிறுவனத்தால் மண்சரிவு ஏற்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கப்பட்ட போதும், இக்கிராம வாழ் மக்கள் தொடர்ந்தும் தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர். “இக்கிராம வாழ் மக்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பாக எச்சரிக்கப்பட்ட போதும் எங்கே போவது எப்படிப் போவது என்பது தெரியாமலேயே தமது வீடுகளில் தொடர்ந்தும் தங்கியிருந்துள்ளனர்” என சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த எச்சரிக்கை எதிர்வுகூறல் முறைமைக்கான தலைவர் இந்து அபயரட்ண தெரிவித்துள்ளார்.

“அனர்த்தத்தின் முன்னர் மக்களை அவர்களது இடங்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்வது தொடர்பான நடவடிக்கையை அரசாங்க நிறுவனம் பொறுப்பேற்றிருக்க வேண்டும்” என குமார சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் அவர்களது இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான அறிவுறுத்தல் எவ்வித தயார்ப்படுத்தலுமின்றி வழங்கப்பட்டிருந்தால் அது தவறானது எனவும் இதற்கு முன்னர் இது தொடர்பில் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் எனவும், முக்கிய மக்கள் எங்கு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்பட வேண்டும் என அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ல், மீறியபெடவில் சிறியளவில் மண்சரிவு ஏற்பட்டதன் பிறகு தேசிய கட்டட வள நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. அப்போது தேசிய கட்டட வள நிறுவனத்திற்கான பதுளை மாவட்டத்தின் பிரதம புவியியலாளர் செனவிரட்ண, இக்கிராமம் முழுவதும் மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார். “இக்கிராமத்தில் வீடுகள் மிகவும் கனதியாகக் கட்டப்பட்டிருந்தன. ஆனால் மண் சரியக்கூடிய நிலை காணப்பட்டது. இதனால் நாங்கள் இக்கிராமம் முழுவதையும் மீள்நிர்மாணம் செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தோம்” என செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இக்கிராமத்தில் 2011ல் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்விலும் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டது. 2009ல், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம், தேசிய கட்டட வள நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மையமானது மக்கள் மத்தியில் மண்சரிவு அபாயம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கை மேற்கொண்டது. இவ்வாறான நகர்வுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு மக்கள அமைப்புக்களை உருவாக்குமாறு கூறப்பட்டது. சில கிராமத்தவர்களுக்கு பெரிய தொலைபேசிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டதா என்பதை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று இக்கிராமத்தை மீளப்புனரமைப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கமோ தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களோ முன்னெடுக்கவில்லை என செனவிரட்ண குறிப்பிடுகிறார். அனர்த்த முகாமைத்துவ மையத்தால் வெளியிடப்பட்டதன் பிரகாரம் இக்கிராமத்தை மீளப்புனரமைப்பதானது அரசாங்கத்தின் நீண்ட காலத் திட்டமாகும். 5.3 மில்லியன் மக்களைக் கொண்ட களுத்துறை, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை மற்றும் இரத்தினபுர போன்ற மாவட்டங்களில் மண்சரிவு தொடர்பான அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட வள மையம் ஏற்கனவே விடுத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *