ஐ.நா விசாரணைக்குழுவின் நெகிழ்வுத்தன்மை – சிறிலங்கா கடும் அதிர்ச்சி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு காலதாமதமாக அனுப்பப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று ஐ.நா அறிவித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி, சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், அவுஸ்ரேலிய தூதுவர் ஆகியோரை சந்தித்துள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் இதுகுறித்து கடுமையான அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்காக சாட்சியங்களை அனுப்பும் காலஎல்லை கடந்த மாதம் 30ம் நாளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
சாட்சியங்களை அனுப்புவதற்கான காலஎல்லையை நீடிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஐ.நா ஏற்றுக் கொள்ளாத போதும், காலதாமதமாக வரும் சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமு என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்றைய சந்திப்பின் போது, ஆழ்ந்த அதிருப்தியையும், அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
“வெளிப்படையாக காலஎல்லையை நீடிக்காமல், இரகசியமான முறையில், குறிப்பிட்ட குழுவினருக்கு நன்மையளிக்கும் விதத்தில், ஐ.நா விசாரணைக்குழு செயற்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 25/1 தீர்மானத்தில், ஐ.நா விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள், ஐரோப்பா, ஆசிய – பசுபிக், மற்றும் வட அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம், விபரங்களைத் திரட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஐ.நா விசாரணைக் குழு, அத்தகைய சாட்சிய அமர்வுகள் எங்கு, எப்போது நடக்கும் என்று வெளிப்படுத்தவில்லை.
தெரிவுசெய்யப்பட்ட மற்றும் பக்கச்சார்பான அணுகுமுறை மூலம் விசாரணைகள் நடத்தப்படுவது ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இது நீதித்துறையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை சிறிலங்கா நிராகரித்துள்ள போதிலும், பக்கச்சார்பின்றி அடிப்படை கோட்பாடுகளுக்கமையவும், நேர்மையாகவும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.