மேலும்

இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்

“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

chinaவியட்நாம் பிரதமர் Nguyen Tan Dung இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னர், ‘Changzheng 2’ என்கின்ற சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீன ஆதரவு நகர்வுகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காக் கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் இதனைப் பொருட்படுத்தாது சிறிலங்கா, சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு தனது நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசாங்கமானது தற்போது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத போதிலும், சிறிலங்காவின் இத்தகைய போக்கானது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகாமவே நோக்கப்படுகிறது.

சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலானது சீனாவின் Chang Xing Dao என்கின்ற போர்க்கப்பலுடன் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் புதன்கிழமை வரை தரித்து நிற்கவுள்ளது. சீன நீர்மூழ்கிக்கப்பல் தற்போது இரண்டாவது தடவையாக சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. இதற்கு முன்னர் முதன்முதலாக கடந்த செப்ரம்பரில் இந்திய அதிபர் பிரணார்ப் முகேர்ஜி வியட்நாமுக்குப் பயணம் செய்த போது சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காவில் தரித்து வைக்கப்பட்டிருந்தது. எதுஎவ்வாறிருப்பினும், சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதானது ‘ஒரு அனைத்துலக பொது நடவடிக்கையாகும்’ என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது. “1987ல் சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டதானது இந்த உடன்படிக்கையை மீறுவதாகவே இந்தியாவால் நோக்கப்படுகிறது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் திருகோணமலை மற்றும் ஏனைய துறைமுகங்களை ஏனைய நாடுகள் தமது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்க முடியாது என 1987 உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என 1987 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என இந்தியாவின் மூலோபாய விவகார வல்லுனர் Brahma Chellaney தெரிவித்துள்ளார்.

“சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் முதன்முறையாகத் தரித்து நின்றபோது இந்தியா அதனை எதிர்த்திருந்த போதிலும் சிறிலங்கா இதனைப் பொருட்படுத்தவில்லை. இந்தியாவானது வடக்கில் சீனாவின் மூலோபாய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள வேளையில், தெற்கில் புதிதாக இராணுவ ரீதியான அழுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டில் இந்தியாவின் மூலோபாய நகர்வுகள் பலவீனமுற்றதானது சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் அனுமதிப்பதற்கான வழியைத் தோற்றுவித்துள்ளது” எனவும் வல்லுனர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறிலங்காவின் கடற்பரப்பிலும் அதன் துறைமுகத்திலும் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பலர் உணரவில்லை. இந்த விடயத்தில் சிறிலங்காவும் மிகப் பெரிய தவறை இழைத்து வருகிறது. இந்தியாவின் நலன்கள் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகத் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவானது தொடர்ந்தும் அனுபவமற்ற ஒரு பிரதமரால் எவ்வித குறிக்கோளுமின்றி ஆட்சி செய்யப்படுகின்றது என சிறிலங்கா அதிபர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதன் கட்டளையின் பேரில் சிறிலங்கா அதிபர் விடுவித்திருந்தார். ஆனால் தற்போது இதே சிறிலங்கா அதிபர் தனது நாட்டில் சீனாவின் வர்த்தக நலன்களுக்காக மட்டுமன்றி சீனாவின் மூலோபாய நலன்களுக்காகவும் தனது நாட்டில் இடமளித்துள்ளதானது இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகும்” என இந்திய ஆய்வாளர் கரன் டாற்றா தெரிவித்துள்ளார்.

“சீனாவின் இத்தகைய நகர்வானது இந்திய மாக்கடல் பிராந்தியமானது இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதைச் சுட்டிநிற்கிறது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீன இராணுவமானது தனது ஆதிக்கத்தை விரிவாக்கியுள்ளதானது பசுபிக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கும் சவாலாக அமையும். சீனா இந்திய மாக்கடலில் தனது அணுவாயுதப் பலத்தை விரிவுபடுத்துவது மட்டுமன்றி, இப்பிராந்தியத்தில் அகலக்கால் பரப்புவதற்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுப்பதற்குமான வழியை உருவாக்கும்” என இந்திய சட்டவாளர் டீபாஜிற் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருத்து “இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்”

 1. Arinesaratnam Gowrikanthan says:

  இலஙகையுடனான நட்பைப் பேனுவதற்காக இந்தியா வளங்கிய தானங்கள் ஒன்று இரண்டல்ல. பற்பல: இதோசில:
  இலங்கையில் வாழும் இந்தியவம்சாவழித்தமிழர்கள் விடயத்தில் இந்திய ஸ்ரீ லங்கா அரசுக்கு ஏற்றமுறையில் நடந்துகொண்டு தமது சொந்த மக்களின் முதுகில் குத்தியது. அவர்கலை பௌத்த பேரகங்காரவாதத்திற்கு இரையாக்கியது.
  கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது.
  ஸ்ரீ லங்காவின் அழைப்பின் பெயரில் கொழும்பில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரதர் ரஜீவுக்கு தாக்க முற்பட்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தையிட்டு மௌனம் காத்தது.
  இலங்கைத்தமிழரை இனப்படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கியது.
  ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வது.
  இந்திய தமிழ்மீனவகளை இம்சிக்கும் ஸ்ரீ லங்கா அரசையிட்டு வாய்மூடி மௌனம் காப்பது.
  ஆகியவை சிலவாகும்.
  இவ்வளவு நடந்தும் ஸ்ரீ லங்கா அரசு இந்தியாவுடன் நட்புநாடாக நடந்து கொள்ளவில்லை. இந்திய அரசின் விட்டுக்கொடுப்புக்கும், ஸ்ரீ லங்கா அரசின் உதாசீனத்திற்குமான காரணந்தான என்ன? தெரிந்தவர்கள் பதில் சொல்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *