இந்தியாவுடனான பொருளாதார உறவுகளில் சிறிலங்கா போதிய அக்கறை காட்டவில்லை
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில்உரையாற்றிய அவர்,
நீண்டகாலமாக முடங்கியுள்ள இந்தியாவுடனான ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை’ (ETCA) விரைந்து இறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவின் துறைமுக விரிவாக்கத் திட்டங்களுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, அவற்றுக்குத் துணையாக அமையும் வகையில் சிறிலங்காவின் துறைமுக மூலோபாயத்தை மறுசீரமைக்க வேண்டும்.
இந்தியா வெறும் வர்த்தகப் பங்காளியாக மட்டுமல்லாமல், சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும், அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாகவும், மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராகவும், அதேவேளையில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரும் பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது.
சிறிலங்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய எதிர்காலமும், இந்தியப் பெருங்கடலின் கடல்சார் மற்றும் தளவாட மையமாக (maritime and logistics hub) மாற வேண்டும் என்ற அதன் இலக்கும் இந்தியாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் சரக்கு பரிமாற்ற நடவடிக்கைகளில் சுமார் 60-70% கொழும்பு துறைமுகத்தின் மூலமே நடைபெறுகின்றன.
எனவே இந்தியா வெறும் சந்தையாக மட்டுமல்லாமல், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு ஆதாரமான பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு அங்கமாகவும் உள்ளது.
இந்தியாவின் விழிஞ்சம் (Vizhinjam) துறைமுகம் கொழும்பு துறைமுகத்துடன் போட்டியிடுமா அல்லது அதற்குத் துணையாக இருக்குமா?
‘அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட்’ (Adani Vizhinjam Port Private Ltd) நிறுவனத்தின் 49% பங்குகளை MSC நிறுவனம் அண்மையில் 1.4 பில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளது.
சேவை வர்த்தகத்தை எந்த அளவுக்கு தாராளமயமாக்க வேண்டும் என்பதை சிறிலங்கா தீர்மானிக்க வேண்டும்.
கொழும்பு துறைமுகத்தின் விநியோகச் சேவைகளில் 40% பங்குகளை மட்டுமே வெளிமுதலீட்டாளர்கள் வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பேணுவதன் மூலம், “ஒன்று, இரண்டு அல்லது மூன்று பெரிய வணிக நிறுவனங்களை” அரசாங்கம் பாதுகாக்க முனைகிறதா?
ஒரு ஒருங்கிணைந்த விநியோக மையத்தை உருவாக்க வேண்டுமானால், களஞ்சிய மற்றும் விநியோக துறைகளில் மட்டுமல்லாமல், கப்பல் முகமை மற்றும் சரக்குக் கையாளுகை போன்ற துறைகளிலும் வெளி முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இந்தியா, டுபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இத்தகைய மாதிரியே பின்பற்றப்படுகிறது.
நாம் உண்மையிலேயே இந்தியப் பெருங்கடலின் கடல்சார் மற்றும் விநியோக மையமாக மாற விரும்பினால், முதலீட்டாளர்களுக்குத் தேவையானவற்றை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லையெனில், இந்தியப் பெருங்கடலின் கடல்சார் மையமாக மாறும் கனவை மறந்துவிட வேண்டும்.
இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தின் காலத்திலேயே கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாடு குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த உடன்பாடு பலமுறை மீளாய்வு செய்யப்பட்ட போதிலும், முன்மொழியப்பட்ட விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை உடன்பாடு அல்லது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு ஆகிய எவையும் நடைமுறைக்கு வரவில்லை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை ஜேவிபி உறுதியளித்திருந்தது , இது குறித்த ஆதாரங்களை அவர்களின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன், அவற்றைச் சபையில் சமர்ப்பிக்கப் போகிறேன்.
இப்போது நீங்கள் அனைவரும் மாறியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். சொல்லப்போனால், நீங்கள் 180 கோணம் அளவுக்கு மாறியிருக்கிறீர்கள்.
இந்தியாவுக்கு எதிரான மனநிலை, இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையாக மாறியுள்ளது; இதை நாங்கள் ஊக்குவிக்கிறோம், வரவேற்கிறோம்.
சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பது வெறும் “வெற்றுப் பேச்சா” அல்லது அதற்குப் பின்னால் ஏதேனும் நடைமுறைக்குச் சாத்தியமான திட்டம் உள்ளதா?
அரசாங்கம் இதில் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், நிலுவையில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டு அவற்றைச் சரிசெய்து, ETCA உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும்.
அரசாங்கம் ஒரு குழுவை அமைத்திருந்தாலும், அதில் எந்தவிதமான அவசரமும் காணப்படவில்லை.
தரநிலைகள், சான்றிதழ்கள் மற்றும் பிற தடைகள் தொடர்பாக, இந்தியாவில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் நிபுணத்துவம் அந்தக் குழு உறுப்பினர்களுக்கு உள்ளதா?
இது வெறும் பொருட்களை விற்பனை செய்வது பற்றியது மட்டுமல்ல; இது ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த உற்பத்திச் சங்கிலியில் பங்கேற்பது பற்றியது.
இந்த உறவு என்பது உற்பத்தி, சேவைகள் மற்றும் விநியோகங்கள் சார்ந்தது.
இருப்பினும், இந்தியா மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகிவிட முடியாது.
சீனா, கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளும் முக்கியமான பங்காளிகளே. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஒவ்வொரு தரப்புடனான உறவையும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்பக் கையாள வேண்டும்.
அமைச்சர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும், வொசிங்டன், பீஜிங், பெர்லின் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களுக்கு இன்னும் தூதுவர்களை நியமிக்கவில்லை.
மேலும், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள், முதலீடுகளை ஈர்ப்பதில் காட்டிய செயல்பாட்டு முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
