கரன்னகொடவும், யோஷிதவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச ஆகியோர், பிரித்தானிய கடற்படை பயிற்சி தொடர்பான வழக்கில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ரவீந்திர பிரமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள், பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன.
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆரம்பமானது; இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 10-ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு , யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்தக் குற்றப்பத்திரத்தின்படி, வசந்த கரன்னகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், பிரித்தானியாவின் டெவோன், டார்ட்மவுத்தில் உள்ள கடற்படை பயிற்சி கல்லூரியில் யோஷித ராஜபக்ஷ பங்கேற்பதற்கு சட்டவிரோதமான முறையில் வசதிகளைச் செய்து கொடுத்ததன் மூலம் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறையற்ற செயலின் விளைவாக யோஷித ராஜபக்ச தேவையற்ற (சட்டவிரோதமான) நன்மையைப் பெற்றுக்கொண்டதாகவும் குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருவருக்கும் எதிராக எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
யோஷித ராஜபக்சவுடன் இணைந்து, அவருக்கு முறையற்ற நன்மையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி ஏற்பாடுகள் ஆகிய இரண்டையும் முன்னெடுப்பதில் வசந்த கரன்னகொட முக்கிய பங்காற்றியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
