பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்
பேராசிரியர் ராஜ் சோமதேவ, இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுடன் தொடர்புடைய விவகாரங்களில் உள்வாங்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சுருக்க அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
அவரால் இதற்கு முன்பதாக சமர்ப்பிக்கப்பட்ட 3 அறிக்கைகளில் உள்ள விடயங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு, முறையான ஆதாரங்களின்றி, இதுவரை எந்தவொரு நிபுணராலும் முன்வைக்கப்படாத விடயங்கள் இந்த நான்காவது அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.
எனவே இது ஏதோவொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கை என்பது தெளிவாகின்றது.
குறிப்பாக இந்த அறிக்கையில் செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் ஆடைகள் கண்டறியப்படாமை தொடர்பில், அவை மண்ணின் தன்மை மற்றும் ஏனைய புறச்சூழல் காரணிகளுக்கு ஏற்ப உக்கலடைந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முந்தைய அறிக்கைகளில், செம்மணியில் கண்டறியப்படும் உடல்கள் ஆடைகளின்றி இருப்பதானது, இந்தச் சூழலில் குற்றம் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்ற கேள்வியைத் தோற்றுவிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி இந்த விவகாரம் தொடர்பில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும், கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், யாழ்ப்பாணக் கிளையினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் செம்மணியில் மனிதப் புதைகுழியில் ஆடைகள் கண்டறியப்படாமையானது குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியப்பாடு குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அவ்வாறிருக்கையில் தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட உடல்கள் படுகொலைக் குற்றங்களின் பின்னர் புதைக்கப்பட்டவை அல்ல என்று நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையிலேயே பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை, அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது.
அதுமாத்திரமன்றி இவ்விவகாரத்தில் அவரது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முறையானதொரு சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இடமளிக்காவிடின், இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் எந்தவொரு வேறுபா டும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
