மேலும்

பயங்கரவாத எதிர்ப்புக்கான டெல்லி பிரகடனம்- பிம்ஸ்டெக் நாடுகள் ஒப்புதல்

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான டெல்லி பிரகடனத்தை பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

பிம்ஸ்டெக் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை இந்தியா அண்மையில் நடத்தியது.

இதன்போது தீவிரமயமாக்கலை எதிர்ப்பது, பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது, பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மற்றும் பயங்கரவாத ஆள்சேர்ப்பைக் கையாள்வது ஆகியவற்றுக்கான ஒரு பிரகடனத்தை இந்த பிராந்தியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், சிறிலங்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ‘டெல்லி பிரகடனம்’, உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு இணங்க, அனைத்துலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பயங்கரவாத நிதி தடுப்பு மற்றும் பணமோசடி தடுப்புத் தரநிலைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.

உறுப்பு நாடுகள், “எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, எங்கு, யாரால், எந்த நோக்கங்களுக்காக நிகழ்த்தப்பட்டாலும், அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் உள்ள பயங்கரவாதத்தையும் வன்முறைத் தீவிரவாதத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றன; ஐ.நா. சாசனம் மற்றும் அனைத்துலக சட்டத்திற்கு இணங்க, பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் வன்முறைத் தீவிரவாதத்தையும் ஒரு விரிவான மற்றும் நீடித்த முறையில் தடுத்து, எதிர்த்துப் போராடி, ஒழிப்பதற்கான எங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம்; மேலும் இந்தச் சூழலில், 1267 தடைக் குழு உட்பட, ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடைகள் நடவடிக்கைகளைத் திறம்படச் செயல்படுத்த அழைப்பு விடுக்கிறோம்” என்று அந்தப் பிரகடனம் கூறுகிறது.

உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், அத்துடன் பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இந்தக் குழு தனது இரங்கலையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

பொருந்தக்கூடிய உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டம் மற்றும் தொடர்புடைய ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களுக்கு இணங்க, பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *